

சென்னை: “விவசாயிகள் எதிர்பார்த்த முக்கியத் திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் இல்லை. மாற்றம் தருவோம் என்று சொன்னவர்கள் எந்த மாற்றமும் தரவில்லை. விவசாயத்தை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்லும் எந்தத் திட்டமும் பட்ஜெட்டில் இல்லை” என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “இன்று தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட்டில், பல்வேறு துறைகளுக்குப் பல கோடி ரூபாய் மதிப்பிலான நிதி ஒதுக்கீடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், 100 நாள் வேலைவாய்ப்பு பற்றி எந்த அறிவிப்பும் இல்லை என்பது மிகப் பெரிய ஒரு ஏமாற்றம்.
நெல் மூட்டைகளை பாதுகாக்க வேளாண் பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை. நெல், கரும்புக்கு ஆதார விலை உயர்வு பற்றி எதுவும் இல்லை. கருவேல மரங்களை அகற்றி அந்த இடத்தை விவசாயிகளுக்கு குத்தகையாக கொடுக்கலாம். இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்கள் வெளிநாடுகளில் வாங்கப்படுவதில்லை.
இயற்கை உரத்தை ஊக்கப்படுத்த வேண்டும். ரசாயன பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய கொள்முதல் விலை முறையாக கிடைக்கவில்லை.
விவசாயிகள் எதிர்பார்த்த முக்கியத் திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் இல்லை. மாற்றம் தருவோம் என்று சொன்னவர்கள் எந்த மாற்றமும் தரவில்லை. விவசாயத்தை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்லும் எந்தத் திட்டமும் பட்ஜெட்டில் இல்லை.
ஒவ்வொரு மாவட்டத்தில் விளைவிக்கும் பொருட்களை அந்தந்த மாவட்டங்களில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பட்ஜெட்டால் எந்த ஒரு மாற்றமும் இல்லை. இந்த பட்ஜெட்டை ஒரு செய்தித்தாளில் வாசிப்பது போல் வாசித்துள்ளார்கள்.
உப்பளங்கள் தயாரிக்கும் தொழிலாளிகளை யாரும் கண்டுகொள்வதில்லை. மீனவர்கள், பனைத் தொழில் செய்வோர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது.
அடுத்த ஜென்மத்தில் விவசாய குடும்பத்தில் பிறக்க வேண்டும் என முதல்வர் விஜய் சொன்னதற்கு வாழ்த்துகள். நாங்கள் விவசாய குடும்பத்தில் பிறந்தவர்கள்தான். அடுத்த ஜென்மத்தில் என்ன... விஜய் நினைத்தால் இப்போதே விவசாயி ஆக மாறலாம். மக்கள் அவருக்கு அதிகாரத்தை வழங்கி இருக்கிறார்கள். நீங்கள் நினைத்தால், இன்று முதலே விவசாயி ஆக மாறலாம். உடனே மாறுங்கள். விவசாயிகளுக்கு நன்மை செய்யுங்கள்” என்று அவர் தெரிவித்துள்ளார்.