சபரிமலை மண்டல கால தரிசன முன்பதிவுகள் தொடங்கியது

வழித்தடங்களையும் தேர்வு செய்துகொள்ளலாம்
சபரிமலை மண்டல கால தரிசன முன்பதிவுகள் தொடங்கியது
Updated on: 
1 min read

குமுளி: சபரிமலை மண்டல கால வழிபாட்டுக்கான தரிசனம் முன்பதிவுகள் இன்று (அக்.29) காலை தொடங்கியது. இதன்மூலம் பக்தர்கள் தாங்கள் செல்ல விரும்பும் பாதைகளுடன் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தேவசம்போர்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் மலையாள மாதத்தின் முதல் 5 நாள், ஓணம், மண்டல, மகர வழிபாடு என்று பல்வேறு காலகட்டங்களில் நடை திறந்து பூஜைகள் நடைபெறும். இதன் ஒருபகுதியாக வரும் நவ.7-ம் தேதி ஐப்பசி மாத சித்திரை நட்சத்திரத்தில் ஒருநாள் வழிபாடு நடைபெற உள்ளது. இதற்காக நவ.6-ம் மாலை கோயில் நடை திறக்கப்பட உள்ளது.

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கடைசி மன்னரான சித்திரைத்திருநாள் பலராம வர்மன் பிறந்தநாள் என்பதால் அன்று ஒருநாள் சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளது.

பின்பு மண்டல பூஜைக்காக நவ.16-ம் தேதி மாலையில் நடைதிறக்கப்பட்டு 41 நாள் தொடர் வழிபாடுகள் நடைபெறும். இதற்காக இணையவழி முன்பதிவு தரிசன பதிவுகள் இன்று காலையில் தொடங்கியுள்ளது.

மண்டல பூஜை, மகர விலக்கு பூஜை காலங்களில் மட்டும் காட்டுப் பாதையில் பயணிக்க பக்தர்களுக்கு அனுமதி உண்டு என்பதால் இதற்கான வழித்தடத்தையும் தேர்வு செய்ய திருவிதாங்கூர் தேவசம்போர்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்காக பாரம்பரிய பாதையான எருமேலி - காளகட்டி (46 கி.மீ), சத்திரம் - புல்மேடு (16 கி.மீ), பம்பை - சபரிமலை (4 கி.மீ) ஆகிய வழித்தட விபரங்களும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

சபரிமலை மண்டல கால தரிசன முன்பதிவுகள் தொடங்கியது
‘அர்னாப்’ புயல் பாதிப்பு: ஏனாம் நிலவரத்தை புதுச்சேரி முதல்வரிடம் கேட்டறிந்தார் அமித் ஷா

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in