“சீட் எண்ணிக்கையை அதிகரிக்கும் திறன் இல்லை” - செல்வப்பெருந்தகையை சீண்டும் பிரவீன் சக்கரவர்த்தி

“சீட் எண்ணிக்கையை அதிகரிக்கும் திறன் இல்லை” - செல்வப்பெருந்தகையை சீண்டும் பிரவீன் சக்கரவர்த்தி
Updated on
1 min read

"கூட்டணியில் சீட்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திறன் காங்கிரஸ் தலைமைக்கு இல்லை என்றால், ஏன் வேட்பாளர்களைக் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கக் கூடாது?" என கேட்டு செல்வப்பெருந்தகையை சீண்டி இருக்கிறார் ராகுல் காந்தியின் நண்பர் பிரவீன் சக்கரவர்த்தி.

கடந்த முறை 25 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸிற்கு, இந்த முறை 40 தொகுதிகள் மற்றும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பிரவீன் சக்கரவர்த்தி ஆரம்பம் முதலே பிடிவாதம் காட்டி வந்தார். இது திமுக - காங்கிரஸ் இடையே பெரும் சலசலப்பை உருவாக்கிய நிலையில், முதல்வர் ஸ்டாலின் நேரடியாக சோனியா காந்தியிடம் பேசியதை அடுத்து தற்காலிக அமைதி நிலவியது.

இருப்பினும், இறுதியில் 28 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டதும், குறிப்பாக புதுச்சேரி விவகாரத்தில் ஏற்பட்ட முடிவுகளும் பிரவீன் சக்கரவர்த்தியை கடும் அதிருப்திக்குள்ளாக்கியதாக சொல்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

இதையடுத்துதான் தனது குமுறலை அவ்வப்போது 'எக்ஸ்' தளத்தில் பிரவீன் பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் ஒரு கார்ட்டூன் படத்தை வெளியிட்டிருந்தார். அதில், குறைவான பீட்சா துண்டுகளைப் பகிர்ந்து கொள்வதில் ஒரு குடும்பத்திற்குள் ஏற்படும் மோதலையும், அதிக துண்டுகள் இருந்தால் நிலவும் அமைதியையும் ஒப்பிட்டிருந்தார்.

இதன் மூலம், "காங்கிரஸிற்கு குறைந்த அளவிலேயே தொகுதிகள் ஒதுக்கப்பட்டதால் தான் கட்சிக்குள் கோஷ்டிப் பூசல் வெடிக்கிறது" என்பதை அவர் மறைமுகமாகச் சுட்டிக்காட்டியது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

தற்போது வேட்புமனுத் தாக்கல் தொடங்கிய நிலையிலும், காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியாவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது. தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, திமுக கொடுத்த பலவீனமான பல தொகுதிகளைப் பெற்றுக்கொண்டதாகவும், காங்கிரஸ் வலுவாக உள்ள தொகுதிகளில் தன் ஆதரவாளர்களுக்கே சீட் ஒதுக்க முயற்சிப்பதாகவும் மூத்த தலைவர்கள் சிலர் குற்றம் சாட்டுகின்றனர். இது தொடர்பாக டெல்லி தலைமைக்கு புகார்கள் குவிந்திருப்பதே பட்டியல் தாமதத்திற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

இந்தச் சூழலில், பிரவீன் சக்கரவர்த்தி மீண்டும் ஒரு அதிரடி கருத்தைப் பதிவிட்டுள்ளார். அதில் அவர், "குறைவான சீட்கள், ஆனால் ஏராளமான விண்ணப்பதாரர்கள். இதில் பாதி தொகுதிகள் தலைவர்களின் குடும்பத்தினருக்கே ஒதுக்கப்படுகின்றன. இதுதான் ஒவ்வொரு தேர்தலிலும் தமிழ்நாடு காங்கிரஸின் கதையாக உள்ளது.

கூட்டணியில் சீட்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திறன் தலைமைக்கு இல்லை என்றால், ஏன் வேட்பாளர்களைக் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கக் கூடாது? தேர்தல் முடிவுகளில் இதனால் பெரிய மாற்றம் ஒன்றும் வந்துவிடப் போவதில்லை. குறைந்த பட்சம் வேட்பாளர் தேர்வு முறையாவது நேர்மையாகவும், நீதியாகவும் இருக்குமே!" எனத் தெரிவித்துள்ளார். இது செல்வப்பெருந்தகை ஆதரவாளர்களிடத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

“சீட் எண்ணிக்கையை அதிகரிக்கும் திறன் இல்லை” - செல்வப்பெருந்தகையை சீண்டும் பிரவீன் சக்கரவர்த்தி
சசிகலா கட்சியில் 21 வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in