

காங்கிரஸ் நிபுணர்கள் மற்றும் தரவு பகுப்பாய்வுக் குழுவின் தலைவரான பிரவீன் சக்கரவர்த்தி ராகுல் காந்திக்கு நெருக்கமான வட்டத்தில் இருப்பவர். அண்மையில் இவர் தவெக தலைவர் விஜய்யை சந்தித்துப் பேசியது முதலே திமுக - காங்கிரஸ் உறவை கலகம் சுற்றி வருகிறது. இந்நிலையில், தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக, பிரவீன் சக்கரவர்த்தி நேற்று கோவை வந்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த 60 ஆண்டாக காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இல்லை.இதனால் காங்கிரஸ் பலவீனமாகப் போய்க்கொண்டு இருக்கிறது. தற்போது கட்சியைப் பலப்படுத்த வேண்டிய தேவைமுக்கியமாக இருக்கிறது. எனவே நாங்கள் 3 முக்கியமான கோரிக்கைகளை வைக்கிறோம். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு அதிக தொகுதிகள், ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு வேண்டும். இது எனது கோரிக்கை இல்லை.
காங்கிரஸ் கட்சி தொண்டனின் கோரிக்கை. காங்கிரஸ் கட்சியின் நலனுக்காக, எதிர்காலத்துக்காகத்தான் இந்தக் கோரிக்கை. இதில் எந்த பிரச்சினையும் இல்லை. காங்கிரஸ் தனித்து போட்டியிடலாமே என்று ஒருசிலர் கூறுகிறார்கள். யார் எப்படி வேண்டுமானாலும் பேசட்டும். அதற்குப் பதில் சொல்ல வேண்டிய தேவையில்லை. தொண்டர்கள், நிர்வாகிகள் எதை வேண்டுமானாலும் கூறலாம். ஆனால், கூட்டணி குறித்து காங்கிரஸ் தலைமைதான் முடிவெடுக்கும். காங்கிரஸ் ஒரு ஜனநாயக ரீதியான கட்சி என்பதால் தொண்டர்கள் தங்கள் கோரிக்கையை தாராளமாக முன் வைக்கலாம். அதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறது.
நான் தவெக தலைவர் விஜய்யை சந்தித்துப் பேசியது குறித்து பலரும் பலவிதமாக பேசுகிறார்கள். ஏன், இரண்டு பேர் சந்தித்து பேசக்கூடாதா? தமிழகத்தில் விஜய் செல்லும் இடங்களுக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக, உற்சாகமாக வருகிறார்கள். மக்கள் அவரை நடிகராகப் பார்க்கவரவில்லை. ஒரு அரசியல்வாதியாக பார்க்க வருகின்றனர். அவர் தமிழகத்தில் ஒரு அரசியல் சக்தியாக உருவாகிவிட்டார். இவ்வாறு அவர் கூறினார்.