‘கூட்டணிக் கட்சிகளை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்’ - கேட்கும் பாஜக... கேட் போடும் அதிமுக!

‘கூட்டணிக் கட்சிகளை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்’ - கேட்கும் பாஜக... கேட் போடும் அதிமுக!
Updated on
2 min read

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் தங்கள் கூட்டணியில் இருந்த கட்சிகள் அனைத்தையும் மீண்டும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து திமுக கூட்டணியை வீழ்த்த வேண்டும் என நினைக்கும் பாஜக, அதற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. ஆனால் தனக்கிருக்கும் சில சங்கடங்கள் காரணமாக, அதற்கு பிடி கொடுக்காமல் நழுவிக் கொண்டே இருக்கிறார் பழனிசாமி. இதனால், பலமான அதிமுக - பாஜக கூட்டணியை கட்டமைப்பது இன்னும் இழுத்துக் கொண்டே போகிறது.

இம்முறை அமித் ஷா தமிழக வரும்போது என்டிஏ கூட்டணியில் இருக்கும் சிக்கல்களுக்கு எல்லாம் தீர்வு கண்டுவிடுவார். அதற்கு முன்னோட்டமாக அவரது புதுக்கோட்டை நிகழ்ச்சியில் அதிமுக உள்ளிட்ட என்டிஏ கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் பங்கெடுப்பார்கள் என்றெல்லாம் சொல்லப்பட்ட நிலையில், அனைத்தும் புஸ்வாணம் ஆகிப் போனது. இதற்குக் காரணம், அதிமுக-வின் ‘பெரியண்ணன்’ போக்கு தான் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

தினகரன், ஓபிஎஸ் உள்ளிட்டவர்களை கூட்டணியில் இணைப்பது குறித்து இறுதி முடிவை எடுத்துவிட வேண்டும் என்ற அஜென்டாவுடன் தான் அமித் ஷா தமிழகம் வந்தார். தாங்கள் கேட்கும் 80 தொகுதிகளை அதிமுக தங்களிடம் தந்துவிட வேண்டும். அதிலிருந்து கூட்டணி கட்சிகளுக்கு தாங்களே தொகுதிகளைப் பங்கிட்டுக் கொடுப்பது என்பது தான் பாஜக-வின் திட்டம். அதாவது, தினகரன், ஓபிஎஸ், பாமக, தேமுதிக உடனான பஞ்சாயத்துகளை நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்பது தான் அதிமுக-வுக்கு பாஜக அனுப்பிய செய்தி. இதுபற்றி அந்தக் கட்சிகளிடமும் பாஜக தரப்பில் பேசி தாஜா செய்து வைத்ததால் தான் அவர்களும் தங்கள் முடிவை அறிவிக்காமல் இழுத்தார்கள்.

இந்தக் கட்சிகளுக்கும் சேர்த்தே தான் 80 தொகுதிகளை அதிமுக-விடம் கேட்கிறது பாஜக. ஆனால், இப்படியெல்லாம் டீல் பேசி முடித்தால் பாஜக தான் கூட்டணியையே கட்டமைத்தது போன்ற தோற்றம் உருவாகிவிடும். மற்ற கட்சிகளுக்கு பாஜக தான் தொகுதிகளைப் பகிர்ந்தளிக்கும் என்றால், நாளைக்கு எந்த முடிவாக இருந்தாலும் பாஜக சொல்வதைத்தான் அந்தக் கட்சிகள் கேட்கும் என்பதால் இந்த செயல்திட்டத்துக்கு அதிமுக ஒத்துவரவில்லை என்கிறார்கள்.

அதனால் தான் முன்னேற்பாடாகவே அதிமுக பொதுக்குழுவில் ‘கூட்டணிக்கு தலைமை அதிமுக தான். எந்தெந்த கட்சிகளை கூட்டணியில் சேர்க்கலாம் என்பதை அதிமுக பொதுச்செயலாளர் தான் முடிவு செய்வார்’ என்று தீர்மானம் நிறைவேற்றி வைத்திருக்கிறார்கள். இந்த நிலையில், மீண்டும் இதே ரீதியிலான பேச்சுவார்த்தைகளை வளரவிட வேண்டாம் என்பதற்காகவே அமித் ஷாவை சந்தித்துப் பேச எஸ்.பி.வேலுமணியை மட்டும் அனுப்பிவிட்டு சேலத்துக்குப் போய்விட்டார் பழனிசாமி.

பழனிசாமி எதிர்பார்த்தது போலவே, தினகரன், ஓபிஎஸ் பஞ்சாயத்துகளையே தன்னை சந்தித்த வேலுமணியிடம் அமித் ஷா பிரதானமாகப் பேசியதாகச் சொல்கிறார்கள். அவருடனான பேச்சுவார்த்தை விவரங்களை பழனிசாமிக்கு உடனடியாகவே தெரிவித்திருக்கிறார் வேலுமணி. ஆனால், அமித் ஷா சொன்ன சில நிபந்தனைகளுக்கு பழனிசாமி சம்மதிக்கவில்லை என்று தெரிகிறது. இந்தத் தகவலை மீண்டும் அமித் ஷாவை சந்தித்து விளக்கினார் வேலுமணி. இப்படி இழுத்துக் கொண்டே போனதால், எந்த முடிவுக்கும் வரமுடியாமல் அப்செட் ஆன அமித் ஷா, திருச்சியில் பொங்கல் விழாவை முடித்துவிட்டு பொலிடிக்கல் மூவ் எதையும் முடிக்க முடியாமலேயே டெல்லி கிளம்பிவிட்டார்.

அதேசமயம், இரண்டு கட்சிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் ஒரு பக்கம் போய்க்கொண்டிருந்த நிலையில், புதுக்கோட்டை நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா, “தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும்” என்று மீண்டும் அழுத்தினார். அதே நாளில் சேலத்தில் பேசிய பழனிசாமியும், “அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்” என்று அமித் ஷாவுக்கு பதில் சொல்வது போல் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார்.

இரண்டு கட்சிகளும் இப்படி காட்டுக்கும் மேட்டுக்குமாக இழுத்துக் கொண்டே இருப்பதால் அதிமுக கூட்டணி இன்னும் இறுதி வடிவத்தை எட்டமுடியாமல் ஊசலாட்டத்தில் இருக்கிறது. அமித் ஷாவை நம்பி தங்களது முடிவுகளை ஒத்தி வைத்திருந்த கட்சிகளும் இனியும் தாமதித்தால் தங்களுக்கு சிக்கலாகிவிடும் என்பதால் தங்களுக்கான பாதைகளைத் தேடி புறப்பட்டுவிட்டன. அப்படித்தான் அன்புமணி தலைமையிலான பாமக , தன்னிச்சையாக முடிவெடுத்து அதிமுக-வுடன் கைகோத்து விட்டது. இந்த நிலையில், அமித் ஷாவை சந்திக்க டெல்லி சென்றிருக்கிறார் பழனிசாமி. இரண்டு கட்சிகளும் இதற்கு மேலும் ஒருமுடிவுக்கு வராவிட்டால் அதன் பிறகு, யார் நினைத்தாலும் யாரையும் இழுத்து நிறுத்த முடியாது என்பது தான் யதார்த்தம்.

‘கூட்டணிக் கட்சிகளை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்’ - கேட்கும் பாஜக... கேட் போடும் அதிமுக!
அதிமுக, பாமக கூட்டணி உறுதியானது: டெல்லி புறப்பட்டு சென்றார் பழனிசாமி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in