

நெல்லை: நெல்லையப்பர் கோயிலில் திருக்கல்யாணத் திருவிழாவின்போது ஏற்பட்ட மின்தடையால் பக்தர்கள் வேதனை அடைந்தனர்.
திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா கடந்த 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண வைபவம் ஆயிரங்கால் மண்டபத்தில் இன்று அதிகாலை நடைபெற்றது.
முன்னதாக, அதிகாலை 3.40 மணியளவில் சுவாமி நெல்லையப்பர் விழா மேடைக்கு வந்த சில விநாடிகளில் அங்கு திடீர் மின்தடை ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சிறிது நேரத்தில் மீண்டும் மின் விநியோகம் சீரானது. இதைத் தொடர்ந்து விழா சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. ஆனால், மீண்டும் ஒருமுறை மின்தடை ஏற்பட்டு, சில விநாடிகளில் சீரானது.
ஐப்பசி திருக்கல்யாண வைபவத்தின்போது மின்தடை ஏற்பட்டது பக்தர்களிடையே வேதனையை ஏற்படுத்தியது. மின்தடை தொடர்பான தகவல்களும், காட்சிகளும் சமூக வலைதளங்களில் பரவின.
கோயில் நிர்வாகம் விளக்கம்
இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக கோயில் நிர்வாகம் விளக்கம் அளித்தது. அதில், ‘மின் தடை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, அதிகாலை 3 மணி முதல் ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. ஜெனரேட்டரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, அதிலிருந்து வெளியேறும் வயர்கள் கருகி மின்தடை ஏற்பட்டது.
தொழில்நுட்ப கோளாறு சில விநாடிகளில் சரி செய்யப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டது. ஆனால், அதே இடத்தில் மீண்டும் வயர்கள் கருகி மின்தடை ஏற்பட்ட சூழலில், மாற்று ஜெனரேட்டர் மூலம் சில விநாடிகளில் மின்சாரம் கொடுக்கப்பட்டு, நிகழ்ச்சி தடையின்றி நடைபெற்றது. மின்தடையால் நிகழ்ச்சிகளில் எந்த விதமான பாதிப்பும் ஏற்படவில்லை’ எனக் கோயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.