

நாமக்கல்: மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக விமானம் மூலம் முட்டை ஏற்றுமதி செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக நாமக்கல்லில் தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சங்கத்தின் செயலாளர் சுந்தர்ராஜன், முட்டை ஏற்றுமதி சங்க செயலாளர் வல்சன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ராசிபுரத்தில் உள்ள கோழிப்பண்ணை ஒன்றில் கோடை வெப்பம் காரணமாக கோழிகள் அதிகளவில் இறந்தன.
மக்களுக்கு பாதிப்பாகாத வகையில் அவற்றை முறையாக அகற்றம் செய்ய பண்ணை உரிமையாளருக்கு உரிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. நாமக்கல் மண்டலத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு எதுவும் இல்லை.
பண்ணைகளில் 21 நாட்களுக்கு ஒரு முறை கோழிகளின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்படுகின்றன. பறவைக் காய்ச்சல் பாதிப்பின்மை காரணமாக ஏற்றுமதி நடைபெறுகிறது.
மத்திய கிழக்காசிய நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக கப்பல் போக்குவரத்து குறைந்துள்ளது. இதனால் முட்டை ஏற்றுமதியும் குறைந்துள்ளது. எனவே கார்கோ விமானம் மூலம் முட்டை ஏற்றுமதி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதேவேளையில் கப்பல்கள் மூலம் ஓரிரு கன்டெய்னர்களில் முட்டைகள் ஏற்றுமதி நடைபெற்று வருகிறது. போர் பதற்றம் தணிந்தால் முட்டை ஏற்றுமதிசீராகும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.