வானிலை முன்னெச்சரிக்கை: நெல்லை, கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

அக்.26-ல் உருவாகிறது புயல்
வானிலை முன்னெச்சரிக்கை: நெல்லை, கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்
Updated on: 
2 min read

சென்னை: வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இது 26-ம் தேதி புயலாக வலுப்பெற்று, அதற்கடுத்த 2 நாட்களில் வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா இடையே கரையை கடக்கக்கூடும். தமிழகத்தில் நாளை (அக்.24) நெல்லை, கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக பகுதிகள் மற்றும் கேரள பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் நிலவுகிறது.

சுமார் 1.5 கிமீ உயரம் வரை தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சியிலிருந்து வட தமிழக கடலோர பகுதிகள் வரை கேரளா வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.

மத்திய கிழக்கு வங்கக்கடல், அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று (அக்.23) உருவானது. இது நாளை (அக்.24) காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், 25-ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், 26-ம் தேதி புயலாகவும் வலுப்பெறும். அதற்கடுத்த இரு நாட்களில் மேலும் வலுப்பெற்று, வடமேற்கு திசையில் நகர்ந்து, வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசா பகுதியில் கரையைக் கடக்கக்கூடும்.

இவற்றின் தாக்கத்தால் தமிழகத்தில் நாளை (அக்.24) திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், கோவை, நீலகிரி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தென்காசி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், பெரம்பலூர், அரியலூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். இதர தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

அக்.25-ம் தேதி நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, பெரம்பலூர், அரியலூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, ஈரோடு, சேலம், நாமக்கல், திருப்பூர், கரூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். இதர தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை (அக்.24) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான அல்லது கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்று முதல் 26-ம் தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் 16 செ.மீ, சின்னகாமன்பட்டியில் 14 செ.மீ., திண்டுக்கல் மாவட்டம் சமுத்திராப்பட்டியில் 13 செ.மீ. கடலூர் மாவட்டம் குப்பநத்தம், விருதாச்சலம், மதுரை மாவட்டம் கல்லிக்குடி, திருவாரூர் மாவட்டம் கொடவாசலில் தலா 11 செமீ, திண்டுக்கல் மாவட்டம் நத்தம், கொடைக்கானல், நடுமண்டலம், மதுரை, வாடிப்பட்டி, புதுச்சேரி திருக்கனூர், ஈரோடு மாவட்டம் சவந்தபூர், தேனி மாவட்டம் சின்னஓவலபுரம் ஆகிய இடங்களில் தலா 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

வானிலை முன்னெச்சரிக்கை: நெல்லை, கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்
ரூ.5 கோடி லஞ்சம் வாங்கியதாக கைதான காவல் ஆய்வாளரை விடுதலை செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in