

சென்னை: தமிழகத்தில் 6 மாவட்டங்களில் பிப்.6-ம் தேதி வரை பனிமூட்டம் நிலவ வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று (பிப்.3) வறண்ட வானிலை நிலவக்கூடும். தெற்கு கேரள கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 4-ம் தேதி தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களிலும், 5-ம் தேதி தென் தமிழகம், வட தமிழக கடலோர மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.
தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் பிப்.6-ம் தேதி வரை மணிக்கு 35 முதல் 55 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் ஊத்து, நாலுமுக்கில் தலா 2 செமீ மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.