

சென்னை: பாரதியார், பாரதிதாசன், பெரியார் பல்கலைக்கழகங்களுக்கு புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய அமைக்கப்பட்ட தேடுதல் குழுக்களில் யுஜிசி பிரதிநிதியை சேர்த்து அரசாணை வெளியிடுமாறு பல்கழகங்களின் வேந்தரும் ஆளுநருமான ஆர்.என்.ரவி தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: யுஜிசி விதிமுறைகள்-2018-ன்படி பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்வு செய்ய அமைக்கப்படும் தேடுதல் குழுவில் யுஜிசியின் பிரதிநிதியும் இடம்பெற வேண்டும். தமிழகத்தில் மாநில பல்கலைக்கழகங்களின் சட்டத்தின்படி, தேடுதல் குழு பரிந்துரை செய்யும் 3 நபர்களில் ஒருவர் பல்கலைக்கழக வேந்தரான ஆளுநரால் துணைவேந்தராக நியமிக்கப்படுகிறார்.
இந்நிலையில், பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்களை தேர்வு செய்ய வேந்தருக்கு பதிலாக அரசுக்கு அதிகாரம் வழங்கும் வகையில் பல்கலைக்கழக சட்டங்களில் திருத்தங்களை தமிழக அரசு கொண்டு வந்தது. இதற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்தது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.
அவகாசம் நீட்டிப்பு: இத்தகைய சூழலில் கோவை பாரதியார் பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், சேலம் பெரியார் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு புதிய துணைவேந்தர்களை தேர்வுசெய்ய தேடுதல் குழுக்கள் அமைத்திருப்பதும், அக்குழுக்களுக்கான காலஅவகாசத்தை நீட்டித்திருப்பதும் கவலை அளிக்கக்கூடிய விஷயம் ஆகும்.
நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இருந்துவரும் நிலையில் துணைவேந்தர் தேடுதல் குழுவுக்கான கால அவகாசத்தை மார்ச் 21 வரை நீட்டித்து கடந்த டிசம்பர் 22-ம் தேதி தமிழக அரசால் அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன.
வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையிலும், இடைக்கால தடை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலும் அரசு எடுத்த நிர்வாக நடவடிக்கைகள் சட்டத்துக்கு புறம்பானவையாகும். மேலும் அவை நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானவையாகும். இந்த விவகாரத்தில் தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால் அவை சட்டப்படி செல்லாது. அதோடு அரசு மற்றும் பல்கலைக்கழக நிர்வாகத்தில் பல்வேறு சிக்கல்களையும் ஏற்படுத்தும்.
எனவே, உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை, புதிய துணைவேந்தர் தேர்வு பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளும் வகையில் தேடுதல் குழுக்களில் யுஜிசி உறுப்பினரையும் சேர்த்து உடனடியாக அரசாணைகளை வெளியிடுமாறு தமிழக அரசுக்கு வேந்தரும் ஆளுநருமான ஆர்.என்.ரவி வேண்டுகோள் விடுத்துள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.