

சென்னை: ‘முதல்வர் விஜய் மீது சிபிஐ வழக்கு தொடர வாய்ப்புள்ளது’ என, அதிமுக எம்.பி இன்பதுரை தெரிவித்த கருத்தால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றிபெற்றது. ஆனால் பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்கள் கிடைக்கவில்லை. இதையடுத்து காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, அவர்களின் ஆதரவை அக்கட்சி பெற்றது.
இதற்கிடையே, அதிமுகவில் சி.வி.சண்முகம் தலைமையில் தனி அணி உருவாகி, 25 பேர் அரசுக்கு ஆதரவாக சட்டப்பேரவையில் வாக்களித்துள்ளனர். இதனால் அதிமுகவுக்குள் பெரும் பிரச்சினை வெடித்துள்ளது. மேலும் சி.வி.சண்முகம் தரப்பு, அரசுக்கு ஆதரவு தெரிவித்ததில் குதிரை பேரம் நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இப்படியான சூழலில், அதிமுக எம்.பி இன்பதுரை தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்றத்தில் 1993-ல் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற குதிரை பேரம் மூலம் ஜெஎம்எம் கட்சியின் எம்.பி.க்கள் ஆதரவை குறுக்கு வழியில் பெற்ற அன்றைய பிரதமர் நரசிம்மராவ், பூட்டாசிங் ஆகியோர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது போன்று, தற்போது முதல்வர் விஜய் மீதும் வழக்கு வர வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அந்த பதிவில் இன்பதுரை தெரிவித்துள்ளார். அவரது கருத்து தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.