

போரூர்- வடபழனி இடையே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நேற்று நடைபெற்றது.
சென்னை: மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் சென்னையில் 2-ம் கட்டமாக, 3 வழித்தடங்களில் 116 கி.மீ. தூரத்துக்கு நடந்து வருகின்றன.
இதில், கலங்கரைவிளக்கம் - பூந்தமல்லி வரையிலான 4-வது வழித்தடத்தில் (26 கி.மீ.) பூந்தமல்லி - போரூர் சந்திப்பு இடையே 10 கி.மீ. தூரத்துக்கு அனைத்து கட்ட சோதனைப் பணிகளும் முடிந்துள்ளன.
இந்த நிலையில், போரூர் - வடபழனி இடையே கட்டமைப்புகள், சிக்னல் தொழில்நுட்பம், உயர்மட்ட மின்பாதை பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, இந்த தடத்தின் ஒரு மார்க்கத்தில் நேற்று சோதனை ஓட்டம் நடைபெற்றது.
மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் பங்கேற்று, தண்டவாள செயல் திறன், சிக்னலிங் அமைப்பு உட்பட பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டனர். இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்தது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன நிர்வாக இயக்குநர் சித்திக் கூறியதாவது: போரூர் - வடபழனி இடையே ஒருமார்க்கத்தில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது.
பூந்தமல்லியில் இருந்து வடபழனி வரை ரயில் பாதை அமைத்து, போக்குவரத்து இணைப்பு கொடுத்தால் மக்களுக்கு அதிக பயனுள்ளதாக இருக்கும். பூந்தமல்லி, போரூரில் இருந்து வரும் பயணிகள் வடபழனியில் இறங்கி, சென்ட்ரல், விம்கோ நகர் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்லலாம்.
பூந்தமல்லி - போரூர் தடத்தில் ஏற்கெனவே சோதனை ஓட்டம் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்து, சான்றிதழ் கொடுப்பார்.
அதன் பிறகு, ரயில்வே வாரியம் அனுமதி வழங்கியதும், பூந்தமல்லி-வடபழனி தடத்தில் மெட்ரோ ரயில் பிப்ரவரி முதல் முழுமையாக தொடங்கும் என எதிர்பார்க்கிறோம். இந்த தடத்தில் அடுத்த 4, 5 மாதங்களில் ரயில் நிலையங்களை படிப்படியாக தயார்செய்து, இணைப்பு கொடுப்போம். அதன்பிறகு வழக்கமான சேவை தொடங்கும்.
வரும் ஜூனில் பவர் ஹவுஸ் வரை பணிகள் முடிந்துவிடும். மதுரை, கோவை மெட்ரோ மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்கள் இதுவரை கைவிடப்படவில்லை.
நாங்கள் மேலும் சில விவரங்களை சேர்த்து அனுப்பி உள்ளோம். நிலம் கையகப்படுத்துதலில் முதல் செயல்முறையை செய்கிறோம். மதுரையில் நில திட்ட அட்டவணை தயாராகிவிட்டது. கோவையில் ஒரு மாதத்தில் அட்டவணை தயாராகிவிடும் என்றனர்.