

பூந்தமல்லி (தனி) சட்டப்பேரவை தொகுதியில் திமுக, அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக்கழகம், பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் என, 11 பேர் களத்தில் உள்ளனர்.
திமுக - ஆ.கிருஷ்ணசாமி: பூந்தமல்லி தொகுதியில் திமுக வேட்பாளராக 3-வது முறையாகக் களம் காணும் ஆ.கிருஷ்ணசாமியை ஆதரித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பிரச்சாரம் செய்துள்ளனர்.
கடந்த 5 ஆண்டுகளில் எம்எல்ஏவாக தொகுதியில் தான் கொண்டுவந்த திருமழிசை விபத்து மற்றும் அவசர சிகிச்சை மையம் உள்ளிட்ட திட்டப் பணிகள் மற்றும் திமுக தேர்தல் அறிக்கையை முன்வைத்து பிரச்சாரம் செய்து வருகிறார். மேலும், கிராமப்புறங்களில் மினி பேருந்து வசதி, வீட்டுமனைப் பட்டா, அரசு கலைக்கல்லூரி அமைக்க நடவடிக்கை என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளையும் அளித்து வருகிறார்.
அமமுக - டி.ஏ.ஏழுமலை: கடந்த 2016 தேர்தலில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்டு வென்ற டி.ஏ.ஏழுமலை, தற்போது அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுக வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.
இவரை ஆதரித்து, அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்துள்ளனர். தான் எம்எல்ஏவாக இருந்தபோது, நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் மற்றும் அமமுக, அதிமுக தேர்தல் அறிக்கைகளை முன்வைத்து வாக்கு சேகரித்து வருகிறார்.
நாம் தமிழர் கட்சி - ஜெ.மேகலா: நாதக வேட்பாளர் ஜெ.மேகலாவை ஆதரித்து, சீமான் பிரச்சாரம் செய்துள்ளார். கிராமப் புறங்களில் நிலவும் குடிநீர் பிரச்சினை, சீரற்ற மின் விநியோகம், போதிய மருத்துவ வசதியின்மை, அரசு பள்ளிகளில் கழிவறை வசதியின்மை மற்றும் பாதுகாப்பின்மை, வீதிகளில் குவியும் குப்பை, சாலையில் ஓடும் கழிவு நீர் உள்ளிட்டவற்றுக்கு முற்றுப் புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
தமிழக வெற்றிக் கழகம் - ஆர்.பிரகாசம்: தவெக வேட்பாளரான ஆர்.பிரகாசம், “இரண்டு திராவிட கட்சிகளுக்கு மாற்றாக உருவாகியுள்ள தமிழக வெற்றிக்கழகத்துக்கு ஒரு வாய்ப்பை வழங்குங்கள். ஏழை - எளிய குடும்பத்தைச் சேர்ந்த நான், மக்களின் அடிப்படைத் தேவைகள் முழுமையாகப் பூர்த்தியடைய நடவடிக்கை எடுப்பேன்” என உறுதியளித்தும், தேர்தல் வாக்குறுதிகளை முன்வைத்தும் வாக்கு சேகரித்து வருகிறார். தேர்தல் பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கட்சிகளின் வேட்பாளர்கள் களத்தில் முழுமூச்சுடன் இறங்கியுள்ளனர். இதனால் வெற்றி யார் பக்கம் என்பதில் கடும் போட்டி நிலவுகிறது.