

பொன்முடி | கோப்புப் படம்.
சென்னை: செம்மண் முறைகேடு தொடர்பான சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடை சட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி, முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, அமலாக்கத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2006 - 2011-ம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியில் உயர் கல்வி மற்றும் கனிம வளங்கள், சுரங்கத் துறை அமைச்சராக க.பொன்முடி பதவி வகித்தபோது, விழுப்புரம் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகளவில் செம்மண் வெட்டி எடுத்ததன் மூலம், அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்திருந்தது.
பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி, உறவினர் ராஜமகேந்திரன் உள்ளிட்டோர் மீதான இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து, கடந்த ஏப்ரல் மாதம் தீர்ப்பளித்தது.
முன்னதாக, செம்மண் முறைகேடு தொடர்பாக கிடைத்த பெருந்தொகை ஹவாலா பரிவர்த்தனை மூலம் வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாகக் கூறி, அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம சிகாமணி உள்ளிட்டோருக்கு எதிராக, சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையினர் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக, 2023-ஆம் ஆண்டு சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி உள்பட ஐந்து பேர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், மூல வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டு விட்டதால், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கை தொடர்ந்து விசாரிக்க முடியாது என்பதால், அமலாக்கத் துறை வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மூல வழக்கில் விடுதலை செய்யப்பட்டதால், அமலாக்க துறை வழக்கையும் ரத்து செய்ய வேண்டும் என பொன்முடி உள்ளிட்டோர் தரப்பில் வாதிடப்பட்டது.
அமலாக்கத் துறை தரப்பில், விடுதலையை எதிர்த்து மேல் முறையீடு செய்ய இருப்பதாக, தமிழக அரசுத் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டது.
இதையடுத்து, பொன்முடி உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்கும்படி, அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைத்தனர்.