

கோப்புப் படம்
சென்னை: தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட, அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.3,000 வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழர்களின் பாரம்பரிய பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாட, பச்சரிசி, சர்க்கரை, கரும்பு போன்றவற்றுடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு, வேட்டி - சேலை மற்றும் ரொக்கப் பணப் பரிசை தமிழக அரசு ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. எனினும் கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரொக்கப் பணம்எதுவும் வழங்கவில்லை.
இந்நிலையில், இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வரவுள்ளதால், பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.3,000 ரொக்கப் பணம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: இயற்கையின் முதன்மை வடிவாய் அமைந்த சூரியனுக்கும், உழ வர்களின் உழைப்புக்கு உறுதுணையாய் விளங்கும் கால்நடைகளுக்கும், உலக மக்களுக்கு உணவளித்து பசி பிணி போக்கும் விவசாயிகளுக்கும் நன்றி கூறும் வகையில் உலகத் தமிழர்களால் கொண்டாடப்படும் பாரம்பரிய உன்னத விழா பொங்கல் திருநாள் ஆகும்.
பொங்கல் விழாவை சிறப்பாகக் கொண்டாட தமிழக அரசு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீளக் கரும்பு வழங்க முதல்வர் ஏற்கெனவே அறிவித்துள்ளார்.
இதன் மூலம், 2 கோடியே 22 லட்சத்து 91,710 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறு வாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர் பயன்பெறுவார்கள். வேட்டி-சேலைகள் எல்லாமாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் பொங்கல் ரொக்கப் பரிசாக ரூ.3,000 வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
பொங்கல் திருநாளுக்கு முன்பாக ரொக்கப் பரிசும், பொங்கல் பரிசு தொகுப்பும், வேட்டி-சேலைகளும் அனைத்து நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படும்.இவ்வாறு அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் டோக்கன்: பொங்கல் பரிசு தொகுப்பு, வேட்டி-சேலை மற்றும் ரொக்கப் பணம் வழங்குவதற்கான டோக்கனை நியாய விலைக் கடை ஊழியர்கள் இன்று முதல் வீடு வீடாக சென்று வழங்க உள்ளனர். இத்திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் 8-ம் தேதி தொடங்கி வைக்கிறார்.