

சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘பராசக்தி’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
சுதா கொங்கரா இயக்கத்தில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா, பாசில் ஜோசப் உள்ளிட்ட பலர் சிவகார்த்திகேயன் உடன் நடித்துள்ள படம் ‘பராசக்தி’. டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக ரவி கே.சந்திரன், இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். தமிழகத்தில் இப்படத்தினை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடவுள்ளது. வரும் ஜன.10 அன்று வெளியாகும் இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
ட்ரெய்லர் எப்படி? - தமிழ்நாட்டின் மிக முக்கிய வரலாற்று நிகழ்வான இந்தி திணிப்பு எதிர்ப்பு என்ற கதைக்களத்துடன் உருவாகியுள்ள படம் என்பது ஏற்கெனவே தெரிந்ததுதான் என்றாலும், அதன் வீரியத்தை ட்ரெய்லரில் உணர முடிகிறது. 60களின் பின்னணி, ஆடை அலங்காரம், செட்கள் என படக்குழுவின் உழைப்பு ட்ரெய்லரின் ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. 3 நிமிடம் ஓடும் ட்ரெய்லர் முதலில் மெதுவாக தொடங்கி பின்பு பரபரப்பை கூட்டுகிறது.
இந்தி ஆதிக்க எதிர்ப்பு, பேரறிஞர் அண்ணா கேமியோ (சேத்தன்), தீப்பொறி போன்ற வசனங்கள், அனல் பறக்கும் ஆக்ஷன் என படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் கூட்டுகிறது ட்ரெய்லர். குறிப்பாக நாங்கள் “இந்தி திணிப்புக்குதான் எதிரானவர்கள், இந்தி பேசும் மக்களுக்கு அல்ல”, “டெல்லி மட்டும்தான் இந்தியாவா?”, அண்ணா கதாபாத்திரம் பேசும் வசனம் ஆகிய வசனங்கள் கூஸ்பம்ப்ஸ் ரகம். பராசக்தி ட்ரெய்லர் வீடியோ: