

அண்ணாமலை
சென்னை: பொங்கலுக்கு ரூ.3 ஆயிரம் கொடுக்க பணமில்லாமல் விவசாயிகளின் பயிர்க் கடன் பணத்தை திமுக அரசு மடைமாற்றி உள்ளதாக பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: தமிழக கூட்டுறவுச் சங்கங்களில், பழைய பயிர்க் கடன் தொகையைக் கட்டிவிட்டு, புதிய கடன் புதுப்பிப்புக்காக காத்திருக்கும் ஆயிரக்கணக்கான விவசாயிகள், பயிர்க் கடன் புதுப்பிக்கப்படாததால், கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளனர்.
பொங்கலுக்கு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.3 ஆயிரம் கொடுக்க திமுக அரசிடம் பணம் இல்லாமல், விவசாயிகளின் பயிர்க் கடன் பணத்தை மடைமாற்றி, பல ஆயிரக்கணக்கான விவசாயிகளை மன உளைச்சலுக்கு உள்ளாக்கியுள்ளனர். பொங்கல் பண்டிகை கொண்டாடுவதே விவசாயத்தைப் போற்றுவதற்காகத்தான் எனும்போது, தங்களது தேர்தல் விளம்பரத்துக்காக, விவசாயிகளைத் திட்டமிட்டு மோசடி செய்திருக்கிறது திமுக அரசு.
எனவே, உடனடியாக விவசாயிகளின் பயிர்க் கடன்களைப் புதுப்பித்து, அதற்கான பணத்தை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் வாக்குறுதிகள்: அண்ணாமலை வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், ‘தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்து 5 ஆண்டுகள் முடிவடையும் நிலையில், திமுக அரசு எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறது என்பதே முதல்வர் ஸ்டாலினுக்குத் தெரியவில்லை. யார் எதை எழுதிக் கொடுத்தாலும், அதை மேடையில் வாசிப்பது மட்டுமே அவரது வேலையாக இருக்கிறது.
கடந்த 2023 செப்டம்பரில் 99 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக தெரிவித்தார். கடந்த வாரம் அது 72 சத வீதமானது. தற்போது 80 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றியுள்ளோம் என்று கூறுகிறார்.
இது முழுக்க மக்களை ஏமாற்றும் நாடகம். எனவே போலியான வாக்குறுதிகளால் மீண்டும் தமிழக மக்களை ஏமாற்றலாம் என்ற திமுகவின் கனவு ஒருபோதும் பலிக்காது. இவ்வாறு அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.