நாளை பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்: சொந்த ஊருக்கு 16 லட்சம் பேர் பயணம்
சென்னை: பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் சொந்த ஊர்களுக்கு 16 லட்சம் பேர் சென்றுள்ளனர். இதனால் சென்னை பேருந்து, ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. சென்னையில் வேலை, கல்வி, வியாபாரம் போன்ற காரணங்களுக்காக பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றனர். இவர்கள் பொங்கல், தீபாவளி மற்றும் கோயில் திருவிழாக்கள் உள்ளிட்ட சிறப்பு நாட்களில் குடும்பத்துடன் தங்கள் சொந்த ஊருக்குச் செல்வது வழக்கம்.
நாளை பொங்கல் பண்டிகை என்பதால் ஒரு நாள் முன்பாக இன்றே தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும், கோவை, சேலம் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் திட்டமிட்டிருந்தனர். இதனால் நேற்று காலை முதலே சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்களிலும், கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் என பேருந்து நிலையங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட வட மாவட்டங்களை சேர்ந்தவர்கள் இன்று பயணம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
பண்டிகை காலங்களில் தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அந்த வகையில் ஜன.9-ம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து வழக்கமாக தினமும் 2,092 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், கடந்த 9-ம் தேதி கூடுதலாக 614 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
சென்னையில் இருந்து கடந்த 9-ம் தேதி இயக்கப்பட்ட 2,706 பேருந்துகளில் மொத்தம் 1.21 லட்சம் பயணிகள், 10-ம் தேதி இயக்கப்பட்ட 2,804 பேருந்துகளில் 1.26 லட்சம் பயணிகள், 11-ம் தேதி இயக்கப்பட்ட 2,760 பேருந்துகளில் 1.13 லட்சம் பயணிகள், 12-ம் தேதி இயக்கப்பட்ட 3,102 பேருந்துகளில் 1.30 லட்சம் பயணிகள் என 4 நாட்களில் 11,372 பேருந்துகளில் 4.88 லட்சம் பேர் பயணித்துள்ளனர்.
சென்னையில் இருந்து நேற்று மட்டும் பல்வேறு ஊர்களுக்கு மொத்தம் 4,800-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு, 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் மேற்கொண்டதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி கடந்த 5 நாட்களில் அரசு பேருந்துகளில் மட்டும் 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.
இதேபோல ரயில்களிலும் கடந்த வெள்ளிக்கிழமை முதல் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல தொடங்கினர். குறிப்பாக திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் அதிக எண்ணிக்கையில் பயணிகள் சென்றனர். வழக்கமான விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாதவர்கள், சிறப்பு ரயில்களில் முன்பதிவு செய்து, சொந்த ஊருக்கு புறப்பட்டனர். முன்பதிவு டிக்கெட் கிடைக்காதவர்கள் விரைவு ரயில்களில் பொதுப் பெட்டிகளில் நெரிசலுடன் பயணம் மேற்கொண்டனர்.
அந்த வகையில், சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு புறப்பட்ட ரயில்களும் நிரம்பி வழிந்தன. நேற்று மட்டும் ஒன்றரை லட்சம் பேர் பயணம் செய்தனர். ஒட்டுமொத்தமாக கடந்த 5 நாட்களில் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
ஆம்னி பேருந்துகளில் 3 லட்சம் பேரும், கார்கள், இருசக்கர வாகனங்களில் ஆயிரக்கணக்கானோரும் சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
பொங்கலைக் கொண்டாட கடந்த 5 நாட்களில் அனைத்து விதமான போக்குவரத்து சேவைகள் வாயிலாக 16 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர்.
இவர்கள் வரும் ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டு திங்கட்கிழமை காலை மீண்டும் சென்னை திரும்பும் வகையில் பேருந்து, ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
