

பொன். ராதாகிருஷ்ணன்
பழநி: “ஆட்சி முடியும் தருவாயில் ஹஜ் பயணம் செல்வோருக்கு இடம், மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும் என்பது போன்ற வாக்குறுதிகளை வழங்குவது வாக்குகளை பெறுவதற்காக திமுக விரிக்கும் வலை” என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.
பழநி: “ஒவ்வொரு குடும்பத்துக்கும் 2 ஏக்கர் நிலம் கொடுப்பதாக மனதறிந்து பொய் சொல்லி வெற்றிப் பெற்றவர் கருணாநிதி என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.
பழநியில் பாஜக சார்பில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், சட்டப்பேரவை தொகுதி பயிலரங்கம் நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற முன்னாள் மத்திய அமைச்சர், பாஜக மூத்த தலைவருமான பொன். ராதாகிருஷ்ணன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: “2026 தேர்தலில் ஏற்படும் ஆட்சி மாற்றம் என்பது நாடு முழுவதும் திருப்புமுனையாக அமையும்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் இதுவரை தொகுதி பங்கீடு குறித்து எதுவும் பேசவில்லை. தொகுதி பங்கீடுகள் முடிந்த பின்னரே எந்தெந்த தொகுதி என்பது தெரியவரும்.
திமுக தலைவராக இருந்து மறைந்த கருணாநிதி ஒரு தேர்தலில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் இரண்டு ஏக்கர் நிலம் கொடுக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சர் ஆன பிறகு, இரண்டு ஏக்கர் நிலம் குறித்து கேட்டபோது, தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 2 ஏக்கர் நிலம் கொடுக்கும் அளவுக்கு நிலமில்லை என்று தனக்கு தற்போது தான் தெரியவந்துள்ளதாக கூறினார். ஐந்து முறை முதலமைச்சராக இருந்த கருணாநிதி மனதறிந்து பொய் சொல்லி வெற்றி பெற்றார்.
அதுபோல தான், தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின். ஆட்சி முடியும் தருவாயில் ஹஜ் பயணம் செல்வோருக்கு இடம், மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும் என்பது போன்ற வாக்குறுதிகளை வழங்குவது வாக்குகளை பெறுவதற்காக திமுக விரிக்கும் வலை.
தேர்தல் நெருங்கும் போது, பொங்கல் பண்டிகையின் போது ஆளுக்கொரு வீடு கொடுப்போம், பெண்களைப் போல ஆண்களுக்கும் இலவச பேருந்து விடியல் பயணம் , இன்னும் கொஞ்சம் நெருக்கடி ஏற்பட்டால் ஆளுக்கொரு பேருந்து தருவதாக சொல்லி வாக்கு கேட்டாலும் ஆச்சரியமில்லை.
தமிழகத்தை நாசப்படுத்திக் கொண்டிருக்கிற திமுகவின் ஆட்சி அகற்றப்பட வேண்டும். திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்று யாரெல்லாம் உறுதியாக இருக்கிறார்களோ அவர்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டிய நேரம் இது.
இன்னும் ஒரு சில மாதங்களில் கூட்டணி முழு உருவம் பெறும் கேரளாவின் இதயமாக கருதப்படும் திருவனந்தபுரத்தை பாஜக தன் வசப்படுத்தி இருக்கிறது. இது வருகிற தேர்தலில் கட்சிக்கு மேலும் வலுவை சேர்க்கும்” என்று அவர் தெரிவித்தார்.