ஹலோ மைக் டெஸ்ட்டிங்... - கார்ப்பரேட் ஸ்டைலுக்கு மாறி வரும் கட்சி மேடைகள்

ஹலோ மைக் டெஸ்ட்டிங்... - கார்ப்பரேட் ஸ்டைலுக்கு மாறி வரும் கட்சி மேடைகள்
Updated on
2 min read

மேடை நாகரிகம்... மேடை நாகரிகம் என்று அரசியல்வாதிகள் அடிக்கடி சொல்வார்கள். அனைவருக்கும் அது இருக்கிறதோ இல்லையோ, ஆனால் இப்போது, தமிழகத்தில் அரசியல் கட்சிகள் அமைக்கும் மேடைகள் நவீன நாகரிகமாக மாறி வருகின்றன.

ஆரம்ப நாட்களில் பெட்ரோமாக்ஸ் லைட் வெளிச்சத்தில் ஒரே ஒரு மைக் நின்று கொண்டிருக்க, அதற்கு முன்னால் நின்று உரத்த குரலில் பேசுவது தான் மேடைப்பேச்சு. அதன் பிறகான காலத்தில், நான்கைந்து பெஞ்சுகளை போட்டு அதன்மேல் ஏறி நின்று பேசுவார்கள். அதற்குப் பிறகு, வாகனங்களை நிறுத்தி அதன் மேல் ஏறி நின்று பேசினார்கள். இத்தனைக்கும் பிறகுதான் ஒரு நிலையான மேடை அமைந்தது. கூட்டத்தில் பேசவரும் முக்கிய தலைவர் மேடையின் பின்புற வழியாக வந்து மேடையில் ஏறி பேசிவிட்டு அது வழியாகவே இறங்கிச் சென்று விடுவார்.

ஆனால் தற்போது, மேடையும் ரொம்ப முக்கியம் என்ற அளவுக்கு அரசியல் நவீனமாகி இருக்கிறது. கடைசி தொண்டனின் இருக்கை வரைக்கும் கட்சித் தலைவர்கள் சென்று கையசைத்துத் திரும்பும் வகையில் இப்போது மேடை அமைப்பு மாறி இருக்கிறது. காலர் மைக், ரேம்ப் வாக் மேடை என்று புதிதாய் முளைக்கும் கட்சிகளும் புதுமை காட்டுகின்றன.

தமிழ்நாட்டில் இத்தகைய மேடைகளை அமைத்ததில் முன்னோடி பாமக தான். 2016 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு வண்டலூரில் நடைபெற்ற பாமக மாநாட்டில், ரேம்ப் வாக் மேடை, தலைவர் முன்னே நடந்து பேசும் அமைப்பு, காலர் மைக் என வித்தியாசம் காட்டி வியக்க வைத்தார்கள். திமுக உள்ளிட்ட கட்சிகள் இதற்குப் பிறகுதான் இத்தகைய மேடை செட்-அப்களை பின்பற்ற ஆரம்பித்தன.

அண்மையில் விருதுநகரில் நடைபெற்ற திமுக இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில் முதல்வர் ரேம்ப் வாக் மேடையில் நடந்து சென்று தொண்டர்களுக்கு பக்கமாய் நின்று கையசைத்தார்.

மகளிர் மாநாடுகளில் கூட்டத்துக்கு மத்தியில் திறந்த வாகனத்தில் சென்று மேடையை அடைவது போல் மேடை அமைக்கப்படுகிறது. எடப்பாடி பழனிசாமியும் இதே பாணியை கடைப்பிடிக்கத் தொடங்கியிருக்கிறார். இந்த நிலையில், மேடை விஷயத்தில் திமுக தங்களைப் பார்த்து காப்பி அடிப்பதாக தவெக-வினர் சோஷியல் மீடியாவில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள்.

ஆனால், 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு திருச்சி மாவட்டம் சிறுகனூரில் நடைபெற்ற ‘தமிழக விடியலுக்கான முழக்கம்’ பொதுக்கூட்டத்திலேயே ரேம்ப் வாக் மேடையை அமைத்துவிட்டது திமுக. அந்த மேடையில் தான், மகளிர் உரிமைத் தொகை, விடியல் பேருந்து பயணம் உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் ஸ்டாலின்.

இப்படி, மேடைகள் மட்டுமல்லாது, மேடைக்கு எதிரே மக்கள் அமரும் இடங்களும் மிகவும் பாதுகாப்பானதாக மாற்றப் பட்டிருக்கிறது. சுமார் 500 பேர் அளவில் அமரும் அளவுக்கு தனித் தனியாக தடுப்புகள் அமைக்கப்பட்டு நெரிசல் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளப்படுகின்றன. யாரும் பசி, தாகத்தால் அவதிப்படாத அளவுக்கு ஹாட் பாக்ஸ்களில் பிரியாணியும், தண்ணீர் பாட்டில், நொறுக்குத் தீனிகளும் பேக்கேஜ்களாக முன்கூட்டியே இருக்கைகளில் வைக்கப்படுகின்றன. இப்படி, ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தின் பிரத்யேக மீட்டிங் போல தமிழகத்தின் அரசியல் கூட்ட மேடைகள் மாறி இருப்பதும் காலத்துக்கேற்ற மாற்றம் தான்.

ஹலோ மைக் டெஸ்ட்டிங்... - கார்ப்பரேட் ஸ்டைலுக்கு மாறி வரும் கட்சி மேடைகள்
எஸ்.பி.வேலுமணி - பிரேமலதா சந்திப்பு: தேர்தல் களத்தை சூடாக்கிய சிவராத்திரி விழா

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in