

திருச்செந்தூர் கோயிலில் நேற்று தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியின் மனைவி ராதா.
தூத்துக்குடி: தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் மே 4-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், திருச்செந்தூர் கோயிலுக்கு அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் படையெடுத்து வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியின் மனைவி ராதா நேற்று திருச்செந்தூரில் சுவாமி தரிசனம் செய்தார். சட்டப்பேரவை தேர்தல் கடந்த 23-ம் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் நேற்று முன்தினம் மாலை வெளியாகின.
தெளிவற்ற கருத்து கணிப்புகள்
இதில் திமுக தலைமையிலான கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் என பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தெரிவித்தாலும், அதிமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக சில கருத்துக் கணிப்புகளும், தவெக அதிகமாக வெல்ல வாய்ப்பு இருப்பதாக ஒன்றிரண்டு கருத்துக் கணிப்புகளும் தெரிவித்துள்ளன. இதனால் தெளிவற்ற நிலை காணப்படுகிறது.
இந்நிலையில், அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் வழிபாட்டு தலங்களை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலை நோக்கி அதிகமானோர் வந்த வண்ணம் உள்ளனர்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூரில், சூரபத்மனை, சுவாமி ஜெயந்திநாதர் வெற்றி கொண்டார். இதனால் இந்த கோயிலில் வழிபட்டால் எதிரிகள் மற்றும் எதிர் வினைகளை வென்றுவிடலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இதன்படி அரசியல் கட்சியினரும், வேட்பாளர்களும் திருச்செந்தூர் கோயிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். தவெக தலைவர் விஜய், கடந்த 28-ம் தேதி திருச்செந்தூர் கோயிலில் வேலுடன் விஸ்வரூப தரிசனத்தில் பங்கேற்று வழிபாடு நடத்தினார்.
அதேநாளில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களும், தற்போதைய வேட்பாளர்களுமான ஆர்.பி.உதயகுமார், கே.டி.ராஜேந்திர பாலாஜி, எம்.சி.சம்பத் ஆகியோர் திருச்செந்தூர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.
நேற்று முன்தினம் திமுக அமைச்சர்களும், தற்போதையை வேட்பாளர்களுமான பி.கே.சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன், ஓட்டப்பிடாரம் தொகுதி திமுக வேட்பாளர் ராமஜெயம் ஆகியோர் தரிசனம் செய்தனர்.
இதுபோல திமுக அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள், முக்கிய நிர்வாகிகள் சிலர் அடுத்தடுத்து இங்கு தரிசனம் செய்தனர்.
இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான பழனிசாமியின் மனைவி ராதா நேற்று திருச்செந்தூர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
நேற்று அதிகாலை 4.30 மணியளவில் கோயிலுக்கு வந்த அவர், விஸ்வரூப தரிசனத்தில் பங்கேற்று மூலவர்சுப்பிரமணிய சுவாமியை வழிபட்டார். முன்னதாக கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த பிறகு இதுவரை 20-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள், கட்சி தலைவர்கள் திருச்செந்தூர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.
வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் 3 நாட்கள் உள்ள நிலையில் மேலும் பல தலைவர்கள், வேட்பாளர்கள் திருச்செந்தூர் கோயிலுக்கு வர வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.