

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினை, திமுக வேட்பாளர்கள் சென்னை அறிவாலயத்தில் நேற்று சந்தித்தனர். அப்போது வெற்றி வாய்ப்புகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.
தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் ஒரேகட்டமாக கடந்த ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை தமிழகம் முழுவதும் 62 மையங்களில் மே 4-ம் தேதி நடத்தப்படுகிறது.
இதற்கிடையே சமீபத்தில் வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் பெரும்பாலானவை திமுக கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்துள்ளன. இதனால் திமுக நிர்வாகிகள் உட்பட கட்சியினர் மிகுந்த உற்சாகமாக காணப்படுகின்றனர்.
இந்நிலையில், முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை சென்னை அறிவாலயத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் திமுக வேட்பாளர்கள் நேற்று சந்தித்து பேசினர்.
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், எ.வ.வேலு, கே.ஆர். பெரியகருப்பன், சு.முத்துசாமி, சி.வீ.மெய்யநாதன், சி.வி.கணேசன், செந்தில் பாலாஜி, திமுக துணை அமைப்புச் செயலாளர் எஸ்.ஆஸ்டின், டி.ஜெ.கோவிந்தராஜன், சபா.ராஜேந்திரன், நாமக்கல் ராணி, காதர்பாட்சா முத்துராமலிங்கம், கே.எஸ்.மூர்த்தி, ரெ.மகேஷ், ஆ.தமிழரசி, எஸ்.ஏ.சத்யா, மு.மணிகண்டன், புதுச்சேரி ஆர்.சிவா ஆகியோர் நேரில் சந்தித்தனர்.
அவர்களிடம் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வெளிவந்துள்ள நிலையில், கட்சியின் வெற்றி வாய்ப்புகள் குறித்து அவர்களிடம் ஸ்டாலின் கேட்டறிந்தார்.
மேலும், வாக்கு எண்ணிக்கையின்போது கட்சியினர் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். இந்நிகழ்வின்போது திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.