

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் உலக செவிலியர் தினத்தை, பிளாரன்ஸ் நைட்டிங்கேல் கோலமிட்டு கொண்டாடிய செவிலியர்கள். | படம்; ம.பிரபு |
சென்னை: உலக செவிலியர் தினத்தை ஒட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். ஆண்டுதோறும் உலக செவிலியர் தினம் மே மாதம் 12-ம் தேதி கொண்டாடப்படுகிறது.
நவீன செவிலியர் பயிற்சி முறையை நிறுவிய பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையார் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் இந்த கொண்டாட்டம் நடைபெறுகிறது.
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் உலக செவிலியர் தினத்தை பிளாரன்ஸ் நைட்டிங்கேல் உருவப் படத்தை கோலமாக இட்டு செவிலியர்கள் கொண்டாடினர்.
பாமக தலைவர் அன்புமணி: மனித தேவதைகளாக மாறி மருத்துவப் பணி செய்யும் செவிலியர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
உயிருக்குப் போராடும் நோயாளிகளைகாப்பாற்றும் மருத்துவர்கள் மனித கடவுள் என்றால், நோயாளிகளை அன்பு, கனிவு, அக்கறை காட்டியும், ஆறுதல் அளித்தும் கவனித்துக்கொள்ளும் செவிலியர்கள்தான் மனித தேவதைகள்.
எந்தவித வெறுப்பும், சலிப்பும் இல்லாமல் மனிதர்களுக்கு சேவை செய்யும் செவிலியர்களின் உழைப்பும், தியாகமும் போற்றப்பட வேண்டும். அவர்களை இந்த நாளில் வணங்குவோம்; நன்றி செலுத்துவோம்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: மருத்துவமனையின் இன்றியமையாத பணியாளர்களாகவும், மனிதநேயத்தின் உயிர்நாடியாகவும் திகழும் செவிலியர்கள் அனைவருக்கும் உலக செவிலியர் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
அன்பு, தியாகம், பொறுப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் மக்களின் உயிர்களைப் பாதுகாக்கும் தன்னலமற்ற பணியில் ஈடுபட்டுவரும் செவிலியர்களின் சேவை மனப்பான்மையை எந்நாளும் போற்றி வணங்குவோம்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: நோயாளிகளைக் காப்பாற்ற மருந்து இருந்தால் மட்டும் போதாது. நோயின் தன்மை அறிந்து, நோயாளிகளை தேற்றும் தாயுள்ளம் வேண்டும். எனவே செவிலியர்கள் தாய்க்கு நிகரானவர்கள்.
தற்போது ஆண் செவிலியர்களும் இப்பணியில் இருக்கிறார்கள். சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு, தாய்க்கு நிகரான அன்பும் பரிவும் கொண்டு, பொறுமையுடன் ஆற்றும் அரும்பணிதான் செவிலியர் பணி. புனிதமான சேவையில் ஈடுபட்டுள்ள செவிலியர்களுக்கு செவிலியர் நாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.