

சென்னை: ‘கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் புகார் அளித்த விவகாரத்தில் வெளிப்படையான விசாரணை நடத்தி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷை உடனடியாக கைது செய்ய வேண்டும்’ என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட செய்திகளில் கூறியிருப்பதாவது:
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: ‘உங்க அண்ணன், உங்க தாய்மாமன்’ என வசனம் பேசும் முதல்வருக்கு 4 மாதங்களுக்கு முன்பே மாவட்ட ஆட்சியர் புகார் கொடுத்தது தெரியாதா? தேசிய மகளிர் ஆணையமும், உயர்நீதிமன்ற நீதிபதியும் தலையிட்ட பின்னர்தான் ஒரு மாவட்ட ஆட்சியரின் புகாரே பதியப்படும் என்றால் தமிழகத்தில் நடப்பது ஆட்சி தானா? போடாத கமெண்டுக்காக, பேராசிரியரின் முகவரியைத் தேடி கண்டுபிடித்து அதிகாலையில் கடத்திச் செல்ல தெரிந்த காவல்துறைக்கு, முதல்வரின் பொடனிக்கு பின்னால் இருந்து கொண்டு தவறிழைத்த எம்எல்ஏ-வை கைது செய்ய தெரியவில்லையா?
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: மாற்றி பேசி, மறுத்து பேட்டி கொடுத்து, ‘எம்எல்ஏ பாவம்’ என்று முட்டுகொடுத்தும் இத்தனைக்கும் நடுவே திடமாக நின்று தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு எதிராக புகாரை பதிவு செய்துள்ளார் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர். ‘அண்ணன், மாமன்’ என டயலாக் பேசி வந்த முதல்வரின் போலி பிம்பங்கள் அவர் கட்சி எம்எல்ஏ வாலேயே சுக்குநூறாக உடைக்கப்பட் டுள்ளது. கள்ளக்குறிச்சி எம்எல்ஏ கைது செய்யப்பட வேண்டும்.
திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி: ‘இப்படி ஒரு சம்பவம் நடை பெறவே இல்லை; சமூக ஊடகங்களில் வரும் விஷயத்தை வைத்துக்கொண்டு, அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள்’ என்று மிகத் தரக்குறைவான வகையில் தவெக அமைச்சர்கள் விமர்சனங்களை முன்வைத்து வந்தனர்.
இப்போது அவர்கள் என்ன பதில் சொல்லப்போகிறார்கள்? ‘பெண்களைக் காப்பதற்காகவே ஆட்சிப் பொறுப்புக்கு வந்துள்ளேன்’ என்று கூறும் முதல்வர் விஜய் என்ன செய்யப் போகிறார்? பெண்கள் பாதுகாப்பு குறித்துப் பேச இவர்களுக்கு என்ன தகுதியோ, அருகதையோ இருக்கிறது? இதற்கு மேலும் யாரையாவது காப்பாற்ற வேண்டும் என்று நினைத்தால், நிச்சயமாகத் திமுக இதை மிகப் பெரிய அளவில்கையில் எடுக்கும்; நாடாளுமன்றத் திலும் இதை நிச்சயமாக நாங்கள் எழுப்புவோம்.
தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர்: பெண்களுக்கு எதிரான குற்றங்களில் யார் ஈடுபட்டாலும் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏவை உடனடியாக கைது செய்ய வேண்டும். எம்எல்ஏ போன்று பொறுப்பில் இருப்பவர் இப்படி செய்வது வெட்கக்கேடானது.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்: ஒரு பெண் ஐஏஎஸ் அதிகாரியிடம் எம்எல்ஏ தகாத முறையில் நடந்து கொண்டதாக புகார் எழுந்தும் நடவடிக்கை எடுக்காமல் தவெக அரசு அலட்சியமாக நடந்து கொண்டது தவறானது. இனியும் குற்றங்களை பாதுகாக்கும் போக்கை கைவிட்டு, எம்எல்ஏவை கைது செய்யவேண்டும்.
பாமக தலைவர் அன்புமணி: தவெக எம்எல்ஏ மீதான புகாரில் இப்போது தான் தெளிவு பிறந்துள்ளது. இனியும் கால தாமதம் செய்யாமல் மாவட்ட ஆட்சியருக்கு தொல்லை கொடுத்த எம்எல்ஏ மீது கைது நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்: இக்குற்றச்சாட்டுகள் குறித்து எவ்வித அரசியல் தலையீடும் இன்றி, நேர்மையான, வெளிப்படையான விசாரணை நடத் தப்பட வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன்: இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் மாவட்ட ஆட்சியரே புகார் அளித்துள்ள நிலையில், எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப் பட வேண்டும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் தலைமை குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன்: கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷை கைது செய்து பதவி நீக்கம் செய்யவேண்டும். இல்லையெனில் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: ‘கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்குதான்’ என்பதை போல கள்ளக்குறிச்சி பெண் ஆட்சியர் விவகாரத்தில் அம்பலப்பட்டு நிற்கிறது தவெக அரசு. இனியாவது முதல்வர் விஜய் நடவடிக்கை எடுப்பாரா?
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: தவெக எம்எல்ஏ மீதான புகார் தறிகெட்டு நிற்கும் தவெக ஆட்சியின் மோசமான நிலைக்கு சான்றாகும். இனியும் அமைதியாக இருந்து முதல்வர் எதை சாதிக்க நினைக்கிறார்? இது பேரவலமாகும்.
வீ த லீடர்ஸ் தலைவர் அண்ணாமலை: ஒரு பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கே இத்தகைய சூழல் ஏற்பட்டுள்ளது தமிழகம் இதுவரை கண்டிராத ஒன்று. இந்த குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன் மையை எவ்வித அரசியல் தலையீடுமின்றி, வெளிப்படையாக விசாரிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
இதேபோல் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தி.க.தலைவர் கி.வீரமணி, பாஜக தேசிய செயலாளர் ம.வெங்கடேசன், தவாக தலைவர் தி.வேல்முருகன், ஐஜேகே தலைவர் ரவிபச்சமுத்து, எஸ்டிபிஐ மாநில பொறுப்புத் தலைவர் அச.உமர் பாரூக், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் உள்ளிட்டோரும் கள்ளக்குறிச்சி எம்எல்ஏவை கைது செய்ய வலியுறுத்தியுள்ளனர்.