

சென்னை: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி நடைபெற்று வரும் நிலையில் கடந்த டிச.19, 20 தேதிகளில் மட்டும் அரசியல் கட்சிகள் சார்பில் 2.48 லட்சம் ஆட்சேபனை மனுக்கள் மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் வழங்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் நவ.4 முதல் டிச.14-ம் தேதி வரை எஸ்ஐஆர் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து கடந்த 19-ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் 5.43 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 97.37 லட்சம் பேர் நீக்கப்பட்டனர். இதில் இறந்தவர்கள் மட்டும் 26.94 லட்சம் பேர், முகவரியில் இல்லாதவர்கள் 66.44 லட்சம் பேர், ஒன்றுக்குமேற்பட்ட இடங்களில் வாக்குரிமை உள்ளவர்கள் 3.98 லட்சம் பேர் என நீக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 14 லட்சத்துக்கு மேற்பட்டோர் நீக்கப்பட்டுள்ளனர். அதனால் சென்னையில் கடந்த 2 நாட்களாக திருத்த முகாம்கள் நடைபெற்று வருகின்றன.
வரைவு வாக்காளர் பட்டியல் தமிழகம் முழுவதும் 75 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. இதை ஏராளமான வாக்காளர்கள் பார்வையிட்டு வருகின்றனர். இதனிடையே அரசியல் கட்சிகள் சார்பில் வாக்காளர் நீக்கம் தொடர்பாக ஆட்சேபனை மனுக்களை வழங்கி வருகின்றனர். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும் ஏராளமானோர் விண்ணப்பித்து வருகின்றனர்.
இதன்படி கடந்த 19, 20 ஆகிய தேதிகளில் மட்டும் அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி முகவர்கள் சார்பில் 2 லட்சத்து 48,294 ஆட்சேபனை மனுக்கள்மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகங்களில் வழங்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக திமுக சார்பில் 65 ஆயிரம் மனுக்கள், அதிமுக சார்பில் 63 ஆயிரம் மனுக்கள், பாஜக சார்பில் 54 ஆயிரம் மனுக்கள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கக்கோரி 39,821 மனுக்களும், பெயர் நீக்கம் தொடர்பாக 413 மனுக்களும் வந்துள்ளன. இந்த திருத்தப்பணி வரும் ஜன.18-ம் தேதி வரை நடைபெற உள்ளது. பின்னர் பிப்ரவரி மாதம் இறுதிவாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.