

மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ள புதிய தொழிலாளர் சட்டத்தொகுப்புகளால் தொழிலாளர்கள் நவீன கொத்தடிமைகளாக மாற்றப்படும் ஆபத்து உள்ளதாக என காங்கிரஸ், விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கைகளில் கூறியிருப்பதாவது:
தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை: தொழிலாளர் உரிமைகளை பாதுகாக்கும் 44 சட்டங்களில் 15 சட்டங்களை முழுமையாக ரத்து செய்துவிட்டு, 29 சட்டங்களாக திருத்தி அதை 4 சட்டத் தொகுப்புகளாக மத்திய பாஜக அரசு கொண்டு வந்திருக்கிறது. இது வெறும் தொகுப்புச் சட்டமல்ல. தொழிலாளர்கள் ஆண்டாண்டு காலமாக போராடி பெற்ற உரிமைகளை பறிக்கும் சட்டமாகும். அம்பானி, அதானி போன்றவர்களுக்கு சாதகமாக இச்சட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. தொழிலாளர் நலன்களுக்கு எதிரான இந்த தொகுப்பு சட்டங்களை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.
விசிக தலைவர் திருமாவளவன்: பாஜக அரசு புதிதாக இயற்றியிருக்கும் தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் எல்லாவிதமான பணிகளையும் ஒப்பந்தப் பணிகளாக மாற்றுவதற்கு இடமளிக்கிறது. இது இந்திய இளைஞர்களின் எதிர்காலத்தை ஆபத்தில் கொண்டுபோய் நிறுத்தும். பெண் தொழிலாளர்களை இரவுப் பணிகளிலும், உயிருக்கு ஆபத்தான பணிகளிலும் ஈடுபடுத்தும் தடை நீக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் ஒருங்கிணைந்து போராடுவதற்கான உரிமைகள் தரும் சட்டங்களை பாஜக அரசு ஒழித்துக் கட்டி விட்டது.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன்: மத்திய அரசு நடைமுறைபடுத்தியுள்ள 4 சட்டத் தொகுப்புகள் தொழிலாளர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை. இனி எங்கும் நிரந்தர தொழிலாளர்கள் இருக்க மாட்டார்கள். எந்த காரணமும் இல்லாமல் தொழிலாளர்கள் நீக்கப்படுவார்கள். சங்கம் சேரும் உரிமை, கோரிக்கை வைக்கும் உரிமை பறிக்கப்படும். பணிப் பாதுகாப்பு, ஊதியப் பாதுகாப்பு மறுக்கப்படும். தொழிலாளர்களின் சட்டபூர்வ உரிமைகளை மறுக்கும் அறிவிப்பை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம்: புதிய தொழிலாளர் சட்டத்தொகுப்புகளால் தொழிலாளர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு, அவர்கள் நவீன கொத்தடிமைகளாக ஆக்கப்படும் ஆபத்து உள்ளது. நிரந்தர தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு தினக்கூலிகளாக மாற்றப்படுவர். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தொழிலாளர் விரோத சட்ட தொகுப்புகளை உடனடியாக மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.