

சென்னை: தமிழக முதல்வர் விஜய் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து அவதூறாக பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியிருப்பதாவது:
அமைச்சர் செங்கோட்டையன்: நயினார் நாகேந்திரன் எங்கிருந்து, எப்படி பேசுகிறார் என்று என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அவர் இருக்கும் இடம் படிப்படியாகத் தேய்ந்து வருகிறது.
அமைச்சர் ராஜ்மோகன்: பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், ஒரு அரசியல் தலைவரைப் போல பேசாமல் தெருமுனைப் பேச்சாளரை போல் பேசியுள்ளார். திமுகவினர் போல பாஜகவினரும் அவதூறாக பேசி வருகின்றனர்.
அமைச்சர் வன்னியரசு: பெண்களுக்கு எதிரான வெறுப்பும், அவதூறும்தான் பாஜகவினர் பேசும் அரசியலின் அடிப்படை. நயினார் நாகேந்திரன் தனது அநாகரிகமான பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்.
தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர்: அரசியல் விரக்தியின் உச்சத்தில் முதல்வர் விஜய் மற்றும் அவரது தாயார் ஆகியோரை நயினார் நாகேந்திரன் இழிவாகப் பேசியிருப்பதுகண்டிக்கத்தக்கது.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: பொறுப்புள்ள தலைவர்கள் பொறுப்பற்ற முறையிலே பேசுவது ஏற்புடையதல்ல.
வி த லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை: உதயநிதியை தொடர்ந்து, நயினார் நாகேந்திரன் அரசியல் நாகரிகத்தின் எல்லைகளை மீறி முதல்வரின் தாயை இழிவுபடுத்தும் வகையில் பேசுவது மிகவும் கண்டத்துக்குரியது.
தவெக செய்தி தொடர்பாளர் மு.சவுந்தர ராஜா: அரசியலில் இருப்பவர்கள் தங்களது வார்த்தைகளுக்கும் செயல்களுக்கும் பொறுப்புடன் இருக்க வேண்டும். கொள்கைகளை விமர்சிக்கலாம். ஆட்சியின் செயல்பாடுகளை கேள்வி கேட்கலாம். ஆனால், குடும்பத்தை அரசியல் விமர்சனத்துக்குள் இழுப்பது ஒருபோதும் ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கு அழகல்ல.
பாஜக மாநில துணை தலைவர் குஷ்பு: தமிழக முதல்வரின் தாயார் குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ள தரக்குறைவான கருத்து அருவருப்பானது. நீங்கள் இந்த உலகத்துக்கு வந்ததே ஒரு பெண்ணால், ஒரு தாயால் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம்: பெண்களை மதிப்பது பாஜகவின் அகராதியிலேயே இல்லாத விஷயம் என்பது அனைவருக்கும் தெரியும். நயினார் நாகேந்திரனுக்கு நாவடக்கம் தேவை. இதேபோல், அரசியல் கட்சி தலைவர்கள் பலர் நயினார் நாகேந்திரனுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.