சூரியக் கட்சி தலைவரின் சுட்டெரிக்கும் பார்வைக்கு ஆளான மாண்புமிகு | உள்குத்து உளவாளி

சூரியக் கட்சி தலைவரின் சுட்டெரிக்கும் பார்வைக்கு ஆளான மாண்புமிகு | உள்குத்து உளவாளி
Updated on
1 min read

“கழகத்தினர் இன்னும் இரண்டு மாதங்களுக்கு தூக்கம் மறந்து உழைக்க வேண்டும்” என சூரியக் கட்சி தலைவர் சூளுரைத்து வரும் நிலையில், ‘சத்திய சோதனை’ தலைவரின் பெயர் கொண்ட மாண்புமிகுவானவர் தனது துறை சார்ந்த நிகழ்ச்சிக்கே தாமதமாக வந்து சூரியக் கட்சி தலைவரின் சுட்டெரிக்கும் பார்வைக்கு ஆளானாராம்.

போதாதுக்கு, “புதிதாக அரசியலுக்கு வந்திருக்கும் நடிகரை எனக்கு ரொம்பப் பிடிக்கும்” என வலை தொலைக் காட்சி ஒன்றுக்கு வம்படியாய் பேட்டியளித்ததும் மாண்புமிகுவுக்கு உண்மையிலேயே ‘சத்திய சோதனையாக’ அமைந்துவிட்டதாம். இந்த பேட்டியை வெட்டி ஒட்டி தலைவரின் பார்வைக்கு தந்த மாண்புமிகுவின் ’ஆத்மார்த்த அரசியல் நண்பர்கள்’, “அந்தாளு நம்மள தீய சக்தின்னு சொல்லிட்டு இருக்கான். அந்தாளப் பிடிக்கும்னு இவரு எப்படிச் சொல்லலாம்?” என்று எடுத்துக் கோத்தார்களாம்.

ஏற்கெனவே, ‘சத்திய சோதனை’ மாண்புமிகுவுக்கு மீண்டும் வாய்ப்பளிப்பதா வேண்டாமா என ஒத்தையா ரெட்டையா போட்டு பார்த்துக் கொண்டிருந்த சூரியக் கட்சி தலைவரை இந்த சமாச்சாரங்கள் அனைத்தும் மேலும் சூடாக்கிவிட்டதாம். இருந்தாலும் ‘பேட்டை’ மாவட்டத்தின் முதன்மை பொறுப்பிலும் இருப்பதால் இவருக்கு எப்படி சீட் தர மறுப்பது என யோசிக்கும் தலைவர், பேசாமல் 2 சீட் தரலாம் என சொல்லப்பட்ட கூட்டணிக் கட்சிக்கு ‘பேட்டைத்’ தொகுதியை தந்துவிடலாமா என யோசித்து வருகிறாராம்.

அதேசமயம், “நடிகரை நடிகராகத்தானே பிடிக்கும் என்று சொன்னார் அண்ணன்” என்று வக்காலத்து வாங்கி பேசி வரும் மாண்புமிகுவின் விசுவாச வட்டாரம், “தனக்கில்லை என்றாலும் தனது வாரிசுக்காவது பேசவேண்டிய இடத்தில் பேசி சீட்டை கன்ஃபார்ம் பண்ணிடுவாரு அண்ணன்” என்று அடித்துப் பேசி வருகிறார்கள்.

சூரியக் கட்சி தலைவரின் சுட்டெரிக்கும் பார்வைக்கு ஆளான மாண்புமிகு | உள்குத்து உளவாளி
‘கோல்டு மதர்’ பெண்மணி களம் இறங்கினால்..? | உள்குத்து உளவாளி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in