

‘குலுக்கல்’ அதிபரின் மனைவி ‘வேந்தர்’ கட்சியிலிருந்து அதிகாரபூர்வமாக விலகி இருக்கிறார். இதன் பின்னணியில் இலைக் கட்சி இருப்பதாக பேசப்பட்டது. அதற்கேற்ப அவரும் அண்மையில் எடக்கானவரைச் சந்தித்துப் பேசினார்.
“இது மரியாதை நிமித்தமான சந்திப்பு” என ‘குலுக்கல்’ அதிபரின் மனைவி குத்துமதிப்பாகச் சொன்னாலும், வேந்தர் கட்சிக்குள் அவருக்கான மரியாதை ‘தரை டிக்கெட்’ ரேஞ்சுக்கு போனதே கூடுவிட்டுக் கூடுபாயக் காரணமாம். குலுக்கல் பணத்தில் பெரும் தொகையை இதுவரை கட்சிக்காக கரைத்திருக்கிறாராம் ‘குலுக்கல்’ அதிபரின் மனைவி. அதை எல்லாம் வாங்கிச் செலவழித்தவர்கள், கடைசியாகக் கூட்டிய மாநாட்டுக்கும் 3 ‘சி’ வரைக்கும் முழுதாக கறந்து கொண்டார்களாம்.
கேட்க கேட்க இப்படி அவர் வாரி வழங்கிக் கொண்டிருந்ததற்குக் காரணமே தனது சொந்த ஊர் இருக்கும் ‘ஆடானை’ தொகுதி மீதான ஆர்வம் தானாம். இம்முறை இலைக் கூட்டணியில் அங்கே போட்டியிட்டால் ஜெயித்துவிடலாம் என்று கணக்குப் போட்டு ‘ஆடானை’ தொகுதியில் கேட்டவர்களுக்கெல்லாம் சமூக நல உதவிகளையும் தாராளமாகச் செய்து வந்தாராம் மிஸ்டர் ‘குலுக்கலின்’ மனைவி.
இந்த நிலையில், வேந்தர் கட்சிக்கு இம்முறை 3 தொகுதிகள் தரப்படலாம் என பேச்சு வந்ததால், அதில் ஒரு தொகுதியாக ‘ஆடானையை’ தனக்காக கேட்டு வாங்கும்படி வேண்டுகோள் வைத்தாராம் ‘குலுக்கலின்’ மனைவி. ஆனால் கட்சித் தலைமையோ, 3 சீட் கிடைத்தால் யாரெல்லாம் போட்டியிடப் போகிறோம் என ஒரு ரெடிமேட் பட்டியலை நீட்டியதாம். அதில் வேந்தரின் குடும்ப உறவுகளும் சொந்த பந்தங்களும் மட்டுமே இருந்ததால் ‘குலுக்கலின்’ மனைவி கொதித்தே போய்விட்டாராம்.
“அப்படியானால், நான் என்ன செய்வது?” என அவர் கேட்டதற்கு, “வேண்டுமானால் நீங்களே எடக்கானவரைச் சந்தித்து தனியாக ஒரு சீட் கேட்டுப் பாருங்கள்” என்று போகாத ஊருக்கு போயிங் விமானத்தைப் பிடிக்கச் சொன்னார்களாம். அதையும் நம்பியதால் அண்மையில் எடக்கானவரைச் சந்தித்துப் பேசி இருக்கிறார்.
ஆனால் அந்த சந்திப்பின் போது, “நீங்கள் பேசாமல் எங்கள் கட்சிக்கு வந்தால் சீட் ஒதுக்கலாம். அப்படியே இருந்தாலும் நீங்கள் எதிர்பார்க்கும் ‘ஆடானை’யை தரமுடியாது. அதற்குப் பதிலாக உங்கள் இனத்தார் அதிகமாக உள்ள ஒரு தொகுதியை நீங்களே செலக்ட் பண்ணிட்டு வாங்க” என்று சொல்லி அனுப்பினாராம் எடக்கானவர்.
இதையடுத்து சேலம் அல்லது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தற்போது தனக்கான தொகுதியைத் தேடிக் கொண்டிருக்கும் ‘குலுக்கல்’ முதலாளியின் குடும்பத் தலைவி, பிப்ரவரி 19, 20-ல் பத்தாயிரம் பேருடன் வந்து இலைக் கட்சியில் ஐக்கியமாவதாகச் சொல்லி இருக்கிறாராம்.
குடும்பத் தலைவர் சூரியக் கட்சிக்கு தோஸ்த், குடும்பக் குத்துவிளக்கு இலைக் கட்சியில் ஐக்கியம், மருமகப் பிள்ளையாண்டார் விசில் பார்ட்டியில் வியூக வகுப்பாளர். இதுக்கு மேல என்ன வேணும்... நல்லாத்தானே போயிட்டு இருக்கு.