

கதர் கட்சியிக்கும் அதிகாரக் கட்சிக்கும் இடையில் அதிகாரப் பங்கு கோரிக்கை தொடர்பாக அனல் பிரச்சாரம் நடந்து கொண்டிருப்பது ஒருபுறமிருக்க, கதர் கட்சியின் ‘அரசர்’ மகனை ஓரங்கட்ட ‘அறம்’ தொகுதியின் அதிகாரக் கட்சியினர் தனியாக ஒரு போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
அரசரின் ‘சந்திர’ மகன், அறம் தொகுதிக்கு எம்எல்ஏ-வாக வந்த நாள் முதலே அவருக்கும் அதிகாரக் கட்சி அண்ணன்மார்களுக்கும் அவ்வளவாய் ஒத்துப் போகவில்லை. அரசு நிகழ்ச்சிகளுக்குக் கூட தங்களுக்கு மரியாதை கொடுத்து அழைப்பதில்லை என்பது அதிகாரக் கட்சியினரின் ஆகப் பெரும் குற்றச்சாட்டு.
‘அரசர்’ மகனும் இதை பெரிதாக கண்டு கொள்ளாமல் விட்டதால், “இம்முறை கதருக்கு இங்கே வேலை இல்லை; தொகுதி நமக்குத்தான்” என தொகுதியின் அதிகாரக் கட்சி எக்ஸ் எம்எல்ஏ-வான ‘உதயமானவர்’ ஊருக்கு ஊரு மேடை போட்டு பேசி வருகிறார். போதாதுக்கு அதிகாரக் கட்சின் ‘டெக்னாலஜி’ பார்ட்டிகளும் ‘அரசர்’ மகனை ‘மதிப்புக் குறைக்கும்’ விதமாக வீடியோக் களை போட்டு வீதிக்கு இழுத்து வருகிறார்கள்.
இத்தனையும் மீறி, தொகுதியை மீண்டும் ‘அரசர்’ மகனுக்கே கொடுத்தால் ‘உதயமானவரே’ சுயமாக களமிறங்கப் போவதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறாராம். ஒருவேளை, தலைவர் அழைத்துப் பேசி அவரது முடிவை மாற்ற வைத்தால் ‘டெக்னாலஜி’ தம்பிகளில் ஒருவரை சுயமாக நிறுத்தி அரசர் மகனுக்கு எதிராக ஆட்டையைக் கலைக்கவும் ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறார்களாம்.