கதர் கட்சி ‘வெல்த்’ தலைவரின் பக்கா ப்ளான் | உள்குத்து உளவாளி

கதர் கட்சி ‘வெல்த்’ தலைவரின் பக்கா ப்ளான் | உள்குத்து உளவாளி
Updated on
1 min read

சூரியக் கட்சியில் இருக்கலாம், சூப்பர் ஹீரோ கட்சியுடன் பேசலாம் என கதர் கட்சிக்குள் இரண்டு ‘கட்சிகள்’ கச்சைகட்டி ஆடும் நிலையில், சத்தமில்லாமல் இன்னொரு வேலையைச் செய்து கொண்டிருக்கிறாராம் கதர் கட்சியின் ‘வெல்த்’ தலைவர்.

சூரியக் கட்சியால் சில பல சகாயங்களை பெற்றுவரும் அவருக்கு அத்தனையும் விட்டுவிட்டு அந்த முகாமை விட்டு மாற்று முகாம் நோக்கிச் செல்வதற்கு மனம் வரவில்லையாம். அதனால், முடிந்தவரைக்கும் சூரிய கட்சி கூட்டணியிலேயே நீடிப்பதற்கான அத்தனை வேலைகளையும் அழகாகச் செய்து வருகிறாராம் மிஸ்டர் ‘வெல்த்’.

அண்மையில், கட்சிக்கு புதிதாக மாவட்டத் தலைவர்கள் நியமனங்கள் நடந்தன. யாரெல்லாம் ‘சூரியக் கட்சி சுடுதே’ என சூதுவாதாய் பேசிக் கொண்டிருந்தார்களோ அவர்களில் சிலரை தந்திரமாக மாவட்டத் தலைவர்களாக வரவிடாமல் தடுத்து விட்டாராம் மிஸ்டர் ‘வெல்த்’. அடுத்த கட்டமாக கட்சியின் துணை அமைப்புகளிலும் சூரியக் கட்சிக்கு பிடித்தமான அல்லது அந்தக் கட்சியிலிருந்து புலம்பெயர்ந்து வந்தோரை சந்தடி இல்லாமல் அமர்த்தியும் வருகிறாராம்.

‘டெக்னாலஜி’ டீம் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பவரே சூரியக் கட்சியிலிருந்து வந்தவர் தானாம். இதையெல்லாம் பட்டியல் போட்டு டெல்லி தலைமைக்கு ஓலை அனுப்பி இருக்கும் அதிருப்தி கோஷ்டிகள், சூரியக் கட்சி அலுவலகத்தில் இருக்கும் கொடி மரத்தைப் போல கதர் கட்சி அலுவலகத்திலும் முன்னாள் தலைவர் காலத்தில் கொடி மரம் நட்டார்கள்.

சூரியக் கட்சிக்கு நிகராக சொந்தக் கொடியைப் பறக்கவிடக் கூட தயங்கும் ‘வெல்த்’ தலைவர், அந்த கொடிமரத்தில் கட்சிக் கொடியைக் கூட ஏற்றாமல் மொட்டை மரமாக நிறுத்தி வைத்திருக்கிறார் எனவும் அந்த அறிக்கையில் அண்டர் லைன் பண்ணி இருக்கிறார்களாம்.

கதர் கட்சி ‘வெல்த்’ தலைவரின் பக்கா ப்ளான் | உள்குத்து உளவாளி
‘மணி’யானவருடன் மல்லுக்கு நிற்கும் 2 எக்ஸ் எம்எல்ஏ-க்கள் | உள்குத்து உளவாளி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in