

தலைநகரில் இருக்கும் ‘சேரி’ தொகுதியின் கூட்டணிக் கட்சி மக்கள் பிரதிநிதி பற்றி வரும் செய்திகள் திருப்தியாக இல்லையாம். இதனால், “இந்த முறை இந்தத் தொகுதி உங்களுக்கு இல்லை” என்று சிட்டிங் பார்ட்னருக்கு முன்கூட்டியே உணர்த்திவிட்டதாம் ஆலயக் கட்சி.
சிட்டிங் பார்ட்னரின் தந்தையானவர், ஒரு காலத்தில் தேசியக் கட்சியின் டெல்லி மக்கள் பிரதிநிதியாக இருந்தவர். அந்த லாபியை வைத்துத்தான் தனது ஹனிபீ மாவட்டத்தை விட்டுவிட்டு தலைநகரில் மகனுக்கு இடம்பிடித்தார். இப்போது இந்த மகனுக்கு சிக்கல் வருகிறது என்றதும் தனது சின்ன மகனுக்கு துண்டு போடுகிறாராம்.
ரியல் எஸ்டேட் மற்றும் சில பல ‘பஞ்சாயத்துகளில்’ கொழிக்கும் சின்ன மகன் ஆலயக் கட்சியில் அங்கம் வகிப்பதுடன் கட்சியின் சின்னவருக்கும் ‘சிறப்பானவராய்’ சேவை செய்கிறாராம். அந்த செல்வாக்கை வைத்து மகனுக்கு ‘வரம்’ தொகுதியைக் கேட்கிறாராம்.
ஆலயக் கட்சியின் மாவட்ட முதன்மைப் புள்ளியின் சிட்டிங் தொகுதியை எப்படிக் கொடுப்பார்கள் என்று கேட்டால், “இரண்டு முறை அங்கே வென்றுள்ள அவர் மீது சொந்தக் கட்சியினரின் பார்வையே ‘சுதர்சனமாக’ இல்லை. அதனால் யூத் கோட்டாவில் மகனுக்கு சீட் கிடைப்பதில் சிக்கல் இருக்காது” என்று சொல்கிறாராம் தந்தை.