

‘லோட்டஸ்’ கட்சிக்கு 23 தொகுதிகள் தானாம் என தகவல்கள் கசியவிடப்பட்ட நிலையில், ஒரு மாவட்டத் தலைவருக்கு ஒரு தொகுதி வீதம் எங்களுக்கு வேண்டும் என்று இலைக் கட்சியிடம் ‘லோட்டஸ்’ கட்சி பட்டியல் தந்திருக்கிறதாம். இப்போதைய நிலவரப்படி ‘லோட்டஸ்’ கட்சிக்கு தமிழகத்தில் 67 மாவட்டத் தலைவர்கள் இருக்கிறார்கள்.
“அப்படியானால், 67 சீட்களைக் கேட்கிறீர்களா?” என ‘லோட்டஸ்’ பார்ட்டிகளைக் கேட்டால், “வழக்கமா, எத்தனை எம்பி-க்களை வைத்திருக்கிறோமோ அதன் ஆறு மடங்காக சட்டமன்றத் தொகுதிகளைக் கேட்பது தான் எல்லாக் கட்சிகளிலும் நடக்கும். ஆனால், எங்கள் கட்சியிலும் இலைக் கட்சியிலும் இப்போது எம்பி-க்கள் யாரும் இல்லை என்பதால், கடந்த மக்களவைத் தேர்தலில் எங்களுக்கு எத்தனை தொகுதிகளில் கணிசமான வாக்குகள் கிடைத்தனவோ அதைக் கணக்குப் போட்டே ஒரு மாவட்டத் தலைவருக்கு ஒரு தொகுதி வீதம் பட்டியல் கொடுத்திருக்கிறோம். என்றாலும் இதில் எத்தனை தொகுதிக்கு இலைக்கட்சி ஓகே சொல்லும் என்பது அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகளில் தான் முடிவாகும்” என்கிறார்கள்.