அதிருப்தி பெண் வாரிசு புதிய யோசனை | உள்குத்து உளவாளி
அதிகாரக் கட்சியில் இருக்கும் பெண் வாரிசு சென்னைக்குள் இருக்க வேண்டாம் என்பதால் தான் அவரை டெல்லிக்கு அனுப்பிவிட்டார்கள். அதற்காக அவர் எந்தச் சூழலிலும் சங்கடப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக டெல்லியை மையப்படுத்தியும், தெற்கத்திச் சீமையை மையப்படுத்தியும் பிரதானப் பொறுப்புகளையும் அவருக்கு வழங்கினார்கள். ஆனபோதும், பெண் வாரிசு திருப்தியாக இல்லை என்கிறார்கள்.
“எத்தனை காலம் தான் இப்படி டெல்லிக்கும் சென்னைக்குமாக ஓடிக்கொண்டிருப்பது?” என நெருக்கமான வட்டத்தில் ஆதங்கப்பட்டு வரும் அவர், பேசாமல், கேந்திர அரசியலில் தனக்கும் ஒரு இடத்தைப் பிடித்து இங்கேயே இருந்துவிட யோசிக்கிறாராம். தனது இந்த விருப்பத்தை சகோதரர் தரப்புக்கு அரசல் புரசலாக சொல்லியும் விட்டாராம்.
அப்படி அவர் கேந்திர அரசியலுக்குத் திரும்பினால் தலைநகரிலேயே ஒரு தொகுதியில் போட்டியிடுவதிலும் ஆர்வமாக இருக்கிறாராம். அது நடக்காத பட்சத்தில், தென் மண்டலத்தில் இருக்கும் ‘பட்டி’ தொகுதியைக் கேட்கும் யோசனையையும் வைத்திருக்கிறாராம்.
ஆனால், இவரது விருப்பத்துக்கு இதுவரை ஓகே சொல்லாத தலைமை, இவரையும் இங்கே இழுத்து வந்தால் ஒரே வீட்டில் எத்தனை பேருக்கு மாண்புமிகு பட்டம் சூட்டுவது என மனக்குழப்பத்தில் இருக்கிறதாம்.
