

சூரியக் கூட்டணியில் இருக்கும் கட்சிகளில் இருப்பவர்கள் கூடுவிட்டு கூடு பாய்வதால் சூரியக் கட்சி தலைமைக்கு தர்மசங்கடம் ஏற்படுகிறதாம்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, “எங்களது கட்சியைச் சேர்ந்தவர்களை உங்கள் கட்சிக்குள் இழுத்துப் போட்டது கூட்டணி தர்மமா?” என சூரியக் கட்சியின் ‘கரூர் கம்பெனி’யாரிடம் நியாயம் கேட்டார் கதர் கட்சியின் ‘ஜோதி’ப் பெண்மணி.
அடுத்ததாக ‘மல்லை’யாருடன் சேர்ந்து ‘மலர்ச்சிக்’ கட்சியின் முன்னாள் தளபதிகள் சிலர் அறிவாலயப் பிரவேசத்துக்கு தயாரான போது, அக்கட்சியின் ‘விரைப்புத்’ தலைவரே விரைந்து வந்து அதற்குக் கேட் போட்டார்.
இந்த நிலையில், ‘ஹனிபீ’ மாவட்டத்தைச் சேர்ந்த குக்கர் கட்சியின் ஒன்றிய புள்ளியான ‘சக்கரவர்த்தி’ பிரமுகர் ஒருவர் மூன்று மாதங்களுக்கு முன்பு, கதர் கட்சி தலைவரை தனதுக்கு மாவட்டத்துக்கே வரவைத்து பிரமாதக் கூட்டம் கூட்டி கதர் கட்சியில் ஐக்கியமானார்.
இந்த நிலையில், அண்மையில் சந்தடியில்லாமல் ‘சக்கரவர்த்தி’ சூரியக் கட்சிக்கு ஜாகையை மாற்றிவிட்டார். தன்னை வைத்து கூட்டணிக்குள் குத்து வெட்டு வந்துவிடக் கூடாது என்பதற்காக, தான் ஜாகை மாறியது தொடர்பாக தந்த அறிக்கையில், கதர் கட்சியைக் கணக்கில் காட்டாமல் குக்கர் கட்சியிலிருந்து குடி பெயர்ந்ததாகக் காட்டிவிட்டாராம்.