

கடந்த 2021 தேர்தலின் போது தாமரைக் கட்சியில் இருந்த அந்த நடிகை, தெற்கே ‘பாளையத்து’ தொகுதியை எதிர்பார்த்துக் காத்திருந்தார். இதற்காக, அங்கே அலுவலகம் எல்லாம் திறந்து தனது தோழியின் உதவியோடு சில பல முன்னெடுப்புகளை அவர் எடுத்த நிலையில், அவரது கனவைக் கலைக்கும் விதமாக மாவட்டத்தின் இலைக் கட்சி முதன்மைப் புள்ளி தொகுதி மாறி ‘பாளையத்தில்’ மனு தாக்கல் செய்துவிட்டார்.
இதனால் ஏக மன வருத்தத்தில் இருந்த நடிகை, பிற்பாடு இலைக் கட்சிக்கே இன்வைட் அனுப்பி அங்கே சேர்ந்துவிட்டார். கடந்த முறை ‘பாளையத்தில்’ போட்டியிட்ட இலைக் கட்சி முதன்மைப் புள்ளி இப்போது தனது பழைய தொகுதியான ‘பட்டாசு’ மாநகருக்கு மாறும் திட்டத்தில் இருக்கிறார். அதனால் ‘பாளையம்’ ரூட் தனக்கு க்ளியர் என நினைத்து அந்தத் தொகுதிக்கு விருப்ப மனு கொடுத்திருக்கிறார் நடிகை.
ஆனாலும் அவரை அங்கே தலைதூக்க விடக்கூடாது என்பதில் தீர்மானமாக இருக்கும் இலைக் கட்சியின் மாவட்ட முதன்மைப் புள்ளி, ’பாளையத்து’ தொகுதிக்கு தனது நண்பர் ஒருவரை விருப்ப மனு கொடுக்க வைத்திருக்கிறாராம்.
இதனிடையே ‘பாட்டாளி’ கட்சியில் கேஷியராக இருக்கும் ‘திலகப்’ பெண்மணியும், தனது சாதி பின்னணியைச் சொல்லி கூட்டணியில் ‘பட்டாசு’ மாநகர் அல்லது ‘பாளையத்து’ தொகுதியில் சீட் வாங்கி ஜெயிக்க முடியுமா என்று தனது கணவர் நடத்தும் அறக்கட்டளை மூலம் ஆழம் பார்த்து வருகிறாராம்.