முட்டை மாவட்ட வாகை கட்சியின் முட்டல்கள் | உள்குத்து உளவாளி

முட்டை மாவட்ட வாகை கட்சியின் முட்டல்கள் | உள்குத்து உளவாளி
Updated on: 
1 min read

தங்களுக்குக் கிடைக்க வேண்டிய வாய்ப்புகளை எல்லாம் வந்தவர்களும் போனவர்களும் வாரிக்கொண்டு போய்விட்டதாக வாகைக் கட்சிக்காரர்கள் வாயற்றுப் போகும் நிலையில், முட்டை மாவட்டத்தில் வேறு மாதிரியான முட்டல் ஓடிக்கொண்டிருக்கிறது.

அந்த மாவட்டத்தின் மேற்குப் பகுதிக்கு செயலாளராக இருக்கும் மலையாள முதல்வரின் பெயர் கொண்டவர், தேர்தல் சமயத்தில் ‘வெற்றியின்’ மீது பெருத்த சந்தேகத்தில் இருந்தாராம். அதனால், எச்சரிக்கையாக காய் நகர்த்திய அவர், தனக்குப் பதிலாக மாவட்ட தலைநகரில் இன்னொருவரை வேட்பாளராகக் கட்டி இறக்க காய்நகர்த்தினார்.

அந்த சமயம் பார்த்து அந்தத் தொகுதியின் இலைக் கட்சி முன்னாள் எம்எல்ஏ-வுக்கும் அக்கட்சியின் மாவட்ட பிரதானப் புள்ளியான ‘கோல்டு பெல்லுக்கும்’ கொஞ்சம் கோக்கு மாக்கு ஓடிக்கொண்டு இருந்தது. அதை வாய்ப்பாக்கி முன்னாள் எம்எல்ஏ-வை தங்கள் பக்கம் தள்ளிக்கொண்டு வர தடம்போட்டார் வாகைக் கட்சி மா.செ.

ஆனால், அப்போது அந்தத் திட்டத்துக்கு சம்மதிக்கவில்லை இலைக்கட்சி முன்னாள் எம்எல்ஏ. இதனால் அவரது மூன்றெழுத்து பேர் கொண்ட மாப்பிள்ளையை நைஸாகப் பேசி வாகைக் கொடியை பிடிக்க வைத்துவிட்டார் மா.செ. இதையடுத்து அவரது சிபாரிசில், மூன்றெழுத்து மாப்பிள்ளைக்கே முட்டை மாவட்டத்தின் தலைநகர் தொகுதியில் சீட் கொடுத்தது வாகைத் தலைமை.

யாரும் எதிர்பாராத விதமாக மூன்றெழுத்து மாப்பிள்ளை தலைநகரைக் கைப்பற்றினார். தன்னால் முன்னுக்கு கொண்டுவரப்பட்டவர் என்பதால் மூன்றெழுத்து மாப்பிள்ளை தன் கைக்கு அடக்கமாக இருப்பார் என கனவு கண்டார் வாகைக் கட்சி மாவட்டச் செயலாளர்.

ஆனால், நடந்ததோ வேறு. இதே மாவட்டத்தில், கடைசி நேரத்தில் இலைக் கட்சியின் முன்னாள் ‘அதிகாரப்’ புள்ளியின் மகன், அப்பாவை அந்தக் கட்சி கண்டுகொள்ளவில்லை என்று சொல்லி வாகைக் கட்சியில் வாண்டடாக வந்து இணைந்தார். அவரது அப்பாவின் பின்புலத்தை வைத்து அவருக்கு ‘ராசியான’ தொகுதியில்  சீட் கொடுத்து ஜெயிக்க வைத்த வாகைக் கட்சி, மாண்புமிகு இருக்கையையும் அவருக்கு உறுதிப்படுத்தியது.

இந்த நிலையில், மூன்றெழுத்து மாப்பிள்ளையும் மாண்புமிகுவும் பழைய ’இலைப்’ பாசத்தில் தனியாக ஒரு கிளை அமைத்துவிட்டார்களாம். எதுவாக இருந்தாலும் தங்களுக்குள் பேசி முடிவெடுத்துக் கொள்ளும் இவர்கள், மூன்றெழுத்து மாப்பிள்ளைக்கு ஃபியூச்சரைக் காட்டிய மாவட்டச் செயலாளரை அவ்வளவாய் கண்டுகொள்வது இல்லையாம்.

இவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கும் மா.செ-வை மறந்தும் கூப்பிடுவது இல்லையாம். இதனால் நூடுல்ஸாகிக் கிடக்கும் மா.செ, “தம்பியை கட்சிக்கு கூட்டிட்டு வந்து நான் தான் சீட் வாங்கிக் குடுத்தேன். வளர்த்த கடா இப்ப மாருல பாயுது என்ன செய்ய...” என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லிச் சொல்லி மாய்கிறாராம்.

முட்டை மாவட்ட வாகை கட்சியின் முட்டல்கள் | உள்குத்து உளவாளி
‘தென்’ மாவட்ட ‘டெம்பிள்’ தொகுதி இலைக் கட்சி சலசலப்பு | உள்குத்து உளவாளி

X