‘தென்’ மாவட்ட ‘டெம்பிள்’ தொகுதி இலைக் கட்சி சலசலப்பு | உள்குத்து உளவாளி

‘தென்’ மாவட்ட ‘டெம்பிள்’ தொகுதி இலைக் கட்சி சலசலப்பு | உள்குத்து உளவாளி
Updated on: 
1 min read

‘தென்’ மாவட்டத்தில் இருக்கும் ‘டெம்பிள்’ தொகுதி அது. அத்தொகுதியின், ‘ஜேம்ஸ்பாண்ட்’ நடிகரின் பெயரைக் கொண்ட இலைக் கட்சி எம்எல்ஏ-வானவர் ஊசலாட்டத்தில் இருக்கிறாராம். சென்னைவாசியான இவருக்கு இம்முறை சீட் கிடைத்ததே பெருங்கதை. இந்தத் தொகுதியின் லெட்சுமிகரமான முன்னாள் மாண்புமிகு தான் இம்முறை தொகுதியை எதிர்பார்த்திருந்தார். அதற்காக தனது மகளின் பூப்புனித நீராட்டு விழாவுக்கே எடக்கானவரை ஊருக்கு அழைத்து வந்து ஏக தர்பார் காட்டினார்.

ஆனால், இவரது வளர்ச்சியைப் பிடிக்காத மாவட்டத்தின் முதன்மைப் புள்ளியான அந்த ‘அப்பா’, லெட்சுமிகரமானவரைப் பற்றி எடக்கானவரிடம் ஏகத்துக்கும் போட்டுக்கொடுத்து ஆட்டையைக் கலைத்துவிட்டாராம். ரூட் கிளியர் ஆனதும் சென்னைவாசியும் ‘சவுண்டு’ பார்ட்டியுமான ‘ஜேம்ஸ்பாண்டை’ கொண்டு வந்து ‘டெம்பிள்’ தொகுதி வேட்பாளராக இறக்குமதி செய்தாராம் ‘அப்பா’. இந்த நிலையில், தேர்தல் ரிசல்ட்டுக்குப் பிறகு எடக்கானவருக்கு எதிராகப் புறப்பட்ட இலைக் கட்சி எம்எல்ஏ-க்கள் படையில் ‘ஜேம்ஸ்பாண்டும்’ இணைந்துவிட்டாராம்.

இதனால் கடுப்பான எடக்கானவர், மிஸ்டர் ‘பாண்டை’ எதுவும் செய்யமுடியாமல், அவருக்கு ‘நல்லவரு, வல்லவரு, விசுவாசமானவரு’ என நற்சான்றழித்த ‘அப்பாவை’ மாவட்ட முதன்மைப் பொறுப்பிலிருந்து தூக்கியடித்தார். இப்படி எதிர்ப்பாளர்கள் இருவரும் ஒருசேர தலைமைக்கு வேண்டாதவர்களாய் போனதை அடுத்து லெட்சுமிகரமானவர் மீண்டும் தனது செல்வாக்கை புதுப்பித்துக் கொண்டிருக்கிறார். இப்போது அந்தத் தொகுதியில் மிஸ்டர் ‘பாண்டை’ விட எந்தப் பொறுப்பிலும் இல்லாத அம்மணிக்குத்தான் கட்சிக்குள் செல்வாக்கு இருக்கிறதாம்.

இதையெல்லாம் பார்த்துவிட்டுத்தான் ஊசலாட்டத்துக்கு வந்திருக்கிறாராம் ‘பாண்ட்’. அண்மையில் இலைக் கட்சியின் 5 எம்எல்ஏ-க்கள் மிஸ்டர் ‘பாண்டின்’ வீட்டுக்கு வந்து தங்கி இருந்தார்களாம். இதை மோப்பம் பிடித்துவிட்ட அவரது எதிர்க்கோஷ்டி, விசில் கட்சிக்கு ஆள்பிடிக்கும் வேலையில் இறங்கிவிட்டார் ‘பாண்ட்’ என்று சோஷியல் மீடியாக்களில் செய்திகளைப் பரப்பியதாம்.

இதற்கு அந்த ரூட்டிலேயே போய் மறுப்புச் சொன்ன மிஸ்டர் ‘பாண்ட்’ ‘அந்த எம்எல்ஏ-க்கள் எல்லாம் எனது நண்பர்கள். ஊரைச் சுத்திக்காட்டுவதற்காக அவரை ஊருக்கு அழைத்து வந்திருந்தேன். எங்களுக்கு வேறெந்த திட்டமும் இல்லை’ என்று விளக்கம் கொடுத்தாராம். அவர் இப்படிச் சொன்னாலும், “இலைக் கட்சியிலிருந்து இன்னொரு கும்பல் பனையூருக்குப் பயணப்படுகிறது என்றால் அதில் மிஸ்டர் ‘பாண்டும்’ கட்டாயம் இருப்பார்” என்று சொல்கிறார்கள் ‘டெம்பிள்’ தொகுதி இலைக்கட்சி மக்கள்.

‘தென்’ மாவட்ட ‘டெம்பிள்’ தொகுதி இலைக் கட்சி சலசலப்பு | உள்குத்து உளவாளி
‘ஏழ்மை நாயகன்’ எகிடு தகிடு ஆட்டம் | உள்குத்து உளவாளி

X