

ஜெயில் மாவட்ட இனிஷியல் தொகுதியின் வாகைக் கட்சி குமாரமான எம்எல்ஏ-வானவர் ஏழ்மையின் மொத்தக் குத்தகையே நான் தான் என வேஷம் கட்டியவர். அப்படியாவது தன்னை ‘மாண்புமிகு’ இருக்கையில் அமர்த்துவார்கள் என்று எதிர்பார்த்தார். அது நடக்கவில்லை என்றதும் ஏழை வேஷத்தை ஏறக்கட்டிவிட்டு எகிடு தகிடு ஆட்டம் போட ஆரம்பித்துவிட்டாராம்.
அண்மையில், உள்ளாட்சி நிர்வாகங்களின் பதவிக்காலம் முடிவுக்கு வந்ததை அடுத்து முக்கிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசிய ‘ஏழ்மை நாயகன்’, “எனது தொகுதியில் எனக்குத் தெரியாமல் எந்த வளர்ச்சிப் பணிகளும் மேற்கொள்ளக் கூடாது” என்று வாய்மொழி உத்தரவு போட்டாராம்.
அதைத் தொடர்ந்து சமீபத்தில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடந்த ஒப்பந்ததாரர்கள் - வட்டார வளர்ச்சி அதிகாரிகள் பங்கேற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட ‘ஏழ்மை நாயகன்’, “இந்த யூனியன்ல நடக்கிற 40 சதவீத வேலைகளை நான் யாருக்கு வேண்டுமானாலும் ஒதுக்குவேன்.
அதில் மற்ற ஒப்பந்ததாரர்கள் தலையிடக் கூடாது. மீறி யாராவது மூக்கை நுழைத்து டெண்டர் எடுத்தால், மெட்டீரியல் குவாலிட்டியைக் காரணம் காட்டி கடைசி நேரத்தில் பில் பாஸ் பண்ணவிடாமல் செய்துவிடுவேன்” என்று கிலி அடித்தாராம். இந்த மாவட்டத்தில் இப்போது ஒரே ஒரு தொகுதி மட்டும் மாளிகைக் கட்சி வசம் இருக்கிறது. அதனால் அந்தத் தொகுதியிலும் வளத்துக்கு ‘அணையைக்’ கட்டுகிறாராம் ‘ஏழ்மை நாயகன்’. அங்கு நடந்த தீயணைப்பு நிலைய கட்டிடத் திறப்பு விழாவில் பங்கேற்றவர் அப்படியே அங்குள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கும் விசிட் கொடுத்தாராம்.
அப்போது, “நான் தான் இந்தத் தொகுதிக்கு பொறுப்பு எம்எல்ஏ. அதனால இந்த ஆபீஸ்ல எனக்கு ஒரு ரூம் ஒதுக்கிடுங்க” என்று அதிகாரிகளுக்கு ஆர்டர் போட்டுவிட்டு வந்தாராம். அவர் அங்கிருந்து போன பிறகு, பொழுது போகாமல் இதுபற்றி விவாதித்த அதிகாரிகள், “பொறுப்பு அமைச்சர் போடுவாங்கன்னு கேள்விப்பட்டுருக்கோம்... அதென்னங்க பொறுப்பு எம்எல்ஏ?” என்று கைகொட்டி சிரித்தார்களாம்.