

பெருஞ்செய்தியாகி வரும் ‘குறுஞ்செய்தி’ விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரி தரப்பில் ஏக வருத்தத்தில் இருக்கிறார்களாம். சில மாதங்களுக்கு முன்பே இந்தப் பிரச்சினை வெடித்து கமுக்கமாக பேசி முடிக்கப்பட்டதாம்.
அப்போது இந்த விவகாரத்தில் தலைநகரில் இருக்கும் தலைமை அதிகாரியும் சீறும் கட்சி மாண்புமிகுவும் மத்தியஸ்தர்களாக இருந்து பிரச்சினையை சுமுகமாக பேசி முடித்தார்களாம்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மக்கள் பிரதிநிதியை முதன்மையானவரும் சென்னைக்கு அழைத்து விசாரணையைப் போட்டாராம். அவரிடம் சில விஷயங்களை மறைக்காமல் ஒத்துக்கொண்ட மக்கள் பிரதிநிதி, தனக்குள் இருந்த மனக்குமுறல்களையும் கொட்டித் தீர்த்தாராம்.
அவரது மாவட்டத்தில் முதன்மை அதிகாரிக்கு கீழ் இருந்த குமாரமான அதிகாரி ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் வேறு மாவட்டத்துக்கு தூக்கிவிடப்பட்டாராம். ஆனால், அந்த அதிகாரி சூரியக் கட்சி எம்எல்ஏ ஒருவரைப் பிடித்து தனது டிரான்ஸ்ஃபரை நிறுத்திவைத்து பழைய இடத்திலேயே தொடரலாம் என்ற உத்தரவை வாங்கினாராம்.
சூரியக் கட்சி எம்எல்ஏ-வானவர் சீறும் கட்சியின் தலைவரைப் பிடித்து அவர் மூலமாக அந்தக் கட்சியின் மாண்புமிகுவுக்கு நோட் வைத்து இந்தக் காரியத்தை முடித்துக் கொடுத்தாராம். கடந்த ஆட்சியில் சமுதாயக் கிணறுகள் வெட்டியது மற்றும் தூர்வாரியதில் சூரியக் கட்சி எம்எல்ஏ-வுக்கு சில ‘வசந்தக்’ கணக்குகள் பாக்கி இருக்கிறதாம். அதையெல்லாம் ஸ்மூத்தாக முடிக்க வேண்டுமானால் குமாரமான அதிகாரி அவருக்கு அந்த மாவட்டத்தில் இருந்தாக வேண்டும்.
முதன்மையானவருடான சந்திப்பின் போது குமாரமான அதிகாரியின் சூரியக் கட்சி தொடர்புகளை எல்லாம் சுட்டிக்காட்டிய ‘குறுஞ்செய்தி புகழ்’ மக்கள் பிரதிநிதி, குமாரமான அதிகாரியும் மாவட்ட முதன்மை அதிகாரியும் இன்னமும் சூரியக் கட்சி விசுவாசத்தில் தான் இருக்கிறார்கள். குமாரமானவருக்கு டிரான்ஸ்ஃபர் போட்டீர்கள்.
ஆனால், அதை அவர் கேன்சல் செய்யவைத்து அங்கேயே தொடர்கிறார்” என்று புலம்பினாராம். இதை வைத்துக் கொண்டு குமாரமானவரை மாற்றினால் சீற்றக் கட்சி சிணுங்கிக் கொள்ளும் என்பதால் அப்போது இது விஷயமாக எந்த முடிவும் எடுக்காமல் விட்டுவிட்டதாம் ஆட்சித் தலைமை.
இந்த நிலையில், கமுக்கமாக முடிக்கப்பட்ட ‘குறுஞ்செய்தி’ விவகாரத்தைக் குத்திக் கிளப்பி அதை பூதாகரமாக்கி இருக்கிறார்கள். இருப்பினும் இந்த விஷயத்தில் ஆம் என்று மெல்லவும் முடியாமல் இல்லை என்று முழுங்கவும் முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறதாம் சம்பந்தப்பட்ட மாவட்ட அதிகாரி தரப்பு. இதனிடையே, இந்த விவகாரத்தில் ஆதி முதல் அந்தம் வரை அனைத்தும் அறிந்த சீற்றக் கட்சி மாண்புமிகுவானவர், இனிமேல்தான் விசாரிக்க வேண்டும் என்பது போல் கருத்துச் சொல்லி இப்போது நழுவி இருக்கிறார்.
இதனிடையே ஏற்கெனவே டிரான்ஸ்ஃபர் போட்டு நிறுத்திவைக்கப்பட்ட அந்த குமாரமான அதிகாரிக்கு தற்போது சென்னைக்கு பக்கத்தில் உள்ள மாவட்டத்துக்கு டிரான்ஸ்ஃபர் போட்டிருக்கிறார்கள். இதேபோல் மாவட்ட அதிகாரியும் குறுஞ்செய்தி சர்ச்சைகள் அடங்கியதும் அங்கிருந்து மாற்றப்படலாம் என்கிறார்கள்.