

ஜெயில் மாவட்ட ஆலயக் கட்சியிலிருந்து ஒரு பட்சி ஆளும் முகாமில் அடைக்கலம் தேடப்போவதாக அலாரம் அடிக்கிறார்கள். ஒரு காலத்தில் அந்த மாவட்டத்தில் 5 தொகுதிகளை அடக்கி ஆண்ட ‘குமாரர்’ அவர்.
பொதுப்பணித்துறையில் ஒப்பந்ததாராக இருந்தவரை அரசியலுக்கு கொண்டு வந்து ஆளாக்கிவிட்டதே அந்த மாவட்டத்தில் இருக்கும் ஆலயக் கட்சியின் மூத்த முன்னோடி தான். ஆனால், முன்னோடியின் மகனார் தலையெடுத்ததும், குமாரருக்கும் அவருக்கும் அவ்வளவாய் ஒத்துப்போகவில்லை. தலைமைக் கழக வாசலில் ‘போடா வாடா புண்ணாக்கு’ என்று ’அன்பாய்’ பேசிக்கொள்ளுமளவுக்கு இவர்களது அதிகார யுத்தம் எல்லை மீறியது.
இதனால், வளர்த்த கடா மார்பில் பாயுதே என குமாரரை குட்டிவைக்க சமயம் பார்த்துக் காத்திருந்த மூத்த முன்னோடி, மாவட்டப் பிரிவினையின் போது குமாரருக்கு 2 தொகுதிகளை மட்டும் ஒதுக்கவைத்து அவரது அதிகார வரம்பைக் குறைத்தாராம். தன்னை ஆளாக்கிய சீனியர் இப்படி தன்னை வீழ்த்த சக்கர வியூகம் எடுக்கிறார் என்றதும் மொழிப்பற்றுடன் மலைக்கோட்டை சீனியருடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார் குமாரர்.
கடந்த ஆட்சியில் மலைக்கோட்டை சீனியர் மூலமாக தன்னை வளப்படுத்திக் கொண்ட குமாரர், பணி நியமன விவகாரங்களிலும் தான் நினைத்ததை எல்லாம் சாதித்துக் ‘கொழித்தார்’ என்கிறார்கள். சொந்த மாவட்டத்தில் ஹோட்டல், லாட்ஜ் என தனது வளத்தையும் பெருக்கிக் கொண்டார். இதெல்லாம் மூத்த முன்னோடி தரப்பின் கண்களை உறுத்திக் கொண்டே இருந்த நிலையில், இரண்டு முறை வென்ற தொகுதியில் இம்முறை குமாரர் தோற்றுப் போனார்.
அவருடைய ஆளுகைக்குள் இருக்கும் இன்னொரு தொகுதியிலும் கட்சி தேறவில்லை. இதையடுத்து, மூத்த முன்னோடி தரப்பைச் சேர்ந்தவர்கள் குமாரரை ஓரேயடியாக ஒதுக்கி வருகிறார்களாம். மாவட்டப் பொறுப்பாளர் என்ற முறையில் கட்சிப் பதவிகளுக்காக அவர் கொடுத்த சிபாரிசுகள் கூட கண்டுகொள்ளப்படவில்லையாம். அண்மையில், குமாரருக்கு ஆளும்கட்சியால் நெருக்கடி தரப்பட்ட போதுகூட ஆறுதல் சொல்ல சொந்தக் கட்சியில் யாரும் மெனக்கிடவில்லையாம்.
இதையெல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்துவிட்டு, இனிமேல் இங்கே ஒட்டிக்கொண்டு இருப்பதில் புண்ணியமில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கிறதாம் குமாரர் வட்டாரம். இவர்களின் வாட்டத்தைப் புரிந்து கொண்டு விசில் கட்சியில் இருந்தும் சிலர் பேச ஆரம்பித்திருக்கிறார்களாம்.
“எங்கள் பக்கம் வந்தால் புதுக்கோட்டை விஜயபாஸ்கருக்கு தரப்பட்ட மரியாதை உங்களுக்கும் உண்டு” என்று ஆசைவார்த்தை காட்டுகிறார்களாம். குமாரரின் ஆதரவாளர்களும் அண்ணனை அப்படி இப்படி அசைத்துப் பார்க்கிறார்களாம்.
அதேசமயம், குமாரர் ஒருவேளை விசில் கட்சிக்குப் போக முடிவெடுத்தால் அக்னி மாவட்ட ஆலயக் கட்சி சீனியரின் திருக்குமரனையும் சாதிய பாசத்துடன் பேசி இலவச இணைப்பாக அழைத்துச் சென்றுவிடுவார் என்றும் குமாரரின் விசுவாச வட்டம் கொசுறுத் தகவல் வேறு சொல்கிறது.