

அரசியலுக்கு துளியும் சம்பந்தமில்லாத தனது பாசப் புதல்வியை ‘அன்பு’ மகனை சமாளிப்பதற்காக கட்சிக்கு செயல் புள்ளியாக அமர்த்தினார் தோட்டத்து ஐயா. புதல்வியும் கொஞ்சம் கொஞ்சமாக அரசியல் பழக ஆரம்பித்தார். அவர் பிக்கப் ஆன சமயம் பார்த்து, தேர்தல் முடிவுகள் படித்த பாடத்தால் அரசியல் துறவறம் மேற்கொண்ட ஐயா, ‘அன்பு’ மகனையும் ஆரத் தழுவினார். இதனால், அப்பாவுடன் வருத்தப்பட்டுக் கொண்டு தோட்டத்தை விட்டு வெளியேறினார் பாசப் புதல்வி.
இந்த நிலையில், தனது ஆதரவாளர்களைத் திரட்டி புதல்வி தனிக்கட்சி தொடங்கப் போவதாக செய்திகள் வெளியாகி அதே வேகத்தில் அடங்கியும் போனது. இந்த நிலையில், விசில் தலைவருக்குப் போட்டியாக அரசியல் அவதாரமெடுக்க ஆயத்தமாகி வரும் ‘ஸ்டாரின்’ மருமகன் நடிகர், ஐயாவின் புதல்வியாரை வைத்து ஒரு கணக்குப் போடுகிறாராம்.
விசில் தலைவர் பட்டியலின மக்களின் ரட்சகனாக தன்னை வெளிக்காட்டி வரும் நிலையில், வடமாவட்டங்களில் வலுவாக இருக்கும் வன்னியர் சமூகத்தினர் மீது பார்வையைத் திருப்பி இருக்கிறாராம் ‘ஸ்டாரின்’ மருமகன். தனது இந்தக் கணக்கை வென்றெடுக்க ஐயாவின் புதல்வியார் தன்னோடு இருந்தால் ‘ஃபங்ஷன் சிறக்கும்’ என நினைக்கிறாராம்.
இது விஷயமாக ஐயாவின் புதல்வியுடன் பூர்வாங்கப் பேச்சுவார்த்தையும் நடத்தி இருக்கிறார்களாம். இந்தத் தகவல் கசிந்து ஐயாவின் விசுவாசிகள் புதல்வியாரைத் தொடர்பு கொண்டு பேசினார்களாம். அதற்கு அவர், “நடிகர் தரப்பில் இருந்து என்னிடம் பேசியது உண்மைதான்.
ஆனால், எனக்கு அதில் உடன்பாடில்லை. நம்ம எதுக்காக இன்னொருத்தர் பின்னால போய்க்கிட்டு... சீக்கிரம் நம்மளே புதுசா ஒரு கட்சியை ஆரம்பிப்போம்” என்று சொன்னாராம். “ஐயா இதுக்கு சம்மதிப்பாரா?” என்று ஆதரவாளர்கள் கேட்டதற்கு, “ஐயாகிட்டயும் இது சம்பந்தமா பேசிட்டுத்தான் இருக்கேன்” என்று சொன்னாராம் பாசப் புதல்வி.