

மாநிலத்தின் தென்கோடி தொகுதியில் இருக்கும் ‘லைன்’ தொகுதியில் கதர் கட்சி எம்எல்ஏ-வாக இருப்பவர் சொந்தத் தொகுதியைவிட பிழைப்போட்டும் மலபார் பகுதியைத்தான் பிரதானமாக நினைக்கிறாராம்.
பார்ட்டியின் தேசிய தலைமை வரைக்கும் செல்வாக்கு வளையத்தை விரித்து வைத்திருக்கும் இவர், மலபார் தேசத்தில் மத அமைப்பில் கோலோச்சும் இடத்தில் இருக்கிறார். அதனால் ‘வரவு - செலவுக்கும்’ பஞ்சமில்லாமல் இருக்கிறார். அந்தத் தெம்பில் தான் கடந்த தேர்தல்களில் கதர் பார்ட்டியின் எம்பி, எம்எல்ஏ வேட்பாளர்களுக்கு கணிசமாக ‘நிதி ஆதரவும்’ அளித்து அவர்களை ஜெயிக்கவைத்தாராம்.
இதனால் இவரை எதிர்த்து பார்ட்டிக்குள் யாரும் வாய்திறக்க மறுக்கிறார்கள். தேர்தலில் இவருக்கு சீட் கொடுத்தபோது எழுந்த சலசலப்பு கூட சத்தமில்லாமல் அடங்கிப் போனது. அதேசமயம், மலபார் தேசத்தில் ஏற்கெனவே பணியில் இருந்து விலகிச் சென்ற தனது சகோதரியை அண்மையில் சுகாதாரத் துறையின் முக்கிய பொறுப்பில் அமர்த்திய விவகாரத்தில் அங்கிருக்கும் தோழர்கள் ‘அரசின் அதிகார துஷ்பிரயோகம் பாரீர்’ என்று போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். அந்தளவுக்கு மலபார் அரசாங்கத்தில் செல்வாக்குடன் இருக்கிறார் ‘லைன்’ தொகுதி எம்எல்ஏ.
மரியாதை இல்லை என்று சொல்லி மலர் கட்சிக்குப் போன ‘விஜய’ எம்எல்ஏ, மாதத்தில் 10 நாளாவது தொகுதியைச் சுற்றி வருவாராம். ஆனால், இப்போதிருக்கும் எம்எல்ஏ எப்போதாவது தான் தொகுதிப் பக்கம் தலைகாட்டுகிறாராம்.
வரும்போதே மலபார் தேசத்து வீடியோகிராபரையும் கையோடு கூட்டிவருபவர், அவர் மூலமாக அன்றைய நிகழ்ச்சிகளை ரீல்ஸ்களாக பதிவிட்டுவிட்டு பழையபடி மலபாருக்கே ‘சென்ட்’ ஆகிவிடுகிறாராம்.
இதையெல்லாம் பார்த்துவிட்டு, “ஆடிக்கு ஒரு தரம் இங்கே வந்துட்டுப் போறதுக்குப் பதிலா இவரு பேசாம தனது செல்வாக்கை வெச்சு மலபார் தேசத்துலயே எம்எல்ஏ ஆகியிருக்க வேண்டியதுதானே” என்று புலம்ப ஆரம்பித்திருக்கிறார்கள் மலபார் நாயகனுக்கு வாக்களித்த மக்கள்.