மீனாட்சிப் பட்டண விசில் பார்ட்டியில் விசும்பல்கள் | உள்குத்து உளவாளி

மீனாட்சிப் பட்டண விசில் பார்ட்டியில் விசும்பல்கள் | உள்குத்து உளவாளி
Updated on: 
1 min read

சூப்பர் வேகத்தில் வந்தேறிகள் கூடாரமாக மாறி வருவதாக விசில் பார்ட்டிக்கு எதிராக விமர்சனங்கள் தெறிக்கும் நிலையில், மீனாட்சிப் பட்டண விசில் பார்ட்டியில் விசும்பல்கள் கொஞ்சம் தூக்கலாகவே கேட்க ஆரம்பித்திருக்கின்றன.

ஒரிஜினல் பார்ட்டியில் தொகுதி வாய்ப்புகளை எதிர்பார்த்திருந்த பலருக்கு தேர்தலில் சீட் லபிக்கவில்லை என்ற வருத்தம் உண்டு. அடுத்ததாக, தங்களுக்குக் கிடைக்க வேண்டிய மாண்புமிகு இருக்கைகளையும் மற்றும் பலர் பறித்துக் கொண்டதாக ஜெயித்தவர்களும் புழுங்கினார்கள்.

வடக்கு மாவட்ட செயல்புள்ளியும் எம்எல்ஏ-வுமான ‘கல்லானவர்’ காலம் காலமாக விசில் தலைவரின் அசைக்கமுடியாத விசுவாசியாக இருப்பவர். மேற்கு மாவட்டச் செயலாளராக இருக்கும் ’கோல்டு’ எம்எல்ஏ-வும் அப்படியே. இவர்கள் இருவருமே பிஸியான ‘மகிழ்ச்சி’ மாண்புமிகு கண்ணைக் கட்டிக் கொண்டு கிணற்றில் விழச் சொன்னாலும் விழக் கூடியவர்கள். ஆனால், இவர்கள் இருவருக்கும் மாவட்டத்தின் ‘பவர்’ மாண்புமிகுவுடன் பாலிடிக்ஸ் பண்ண முடியவில்லை.

இந்தப் பஞ்சாயத்தில் தலையிட விரும்பாமல் ‘மகிழ்ச்சி’ மண்புமிகுவும் சர்வீஸ் ரோட்டில் சத்தமில்லாமல் ஒதுங்கிக் கொண்டார். இனிமேல் இவரை நம்பினால் நாலு நல்லது கெட்டதை பார்ப்பதும் கெட்டுவிடும் என முடிவுக்கு வந்த ‘கோல்டு’ புள்ளி, யதார்த்தம் புரிந்து சைடு டிராக்கில் ‘பவர்’ மாண்புமிகுவிடம் பசையில்லாமலே ஒட்டிக் கொண்டார்.

இப்போது இருவரும் இரட்டைக் குழல் துப்பாக்கி என்று சொல்லுமளவுக்கு ’நீயின்றி நானில்லை’ ஆகிவிட்டார்கள். ஆனால், ‘கல்லாக’ நிற்பவர் மட்டும் யார் இல்லாவிட்டாலும் ‘மகிழ்ச்சி’ மாண்புமிகு தன்னை மனம்கோணாமல் பார்த்துக்கொள்வார் என நம்பினார். ஆனால், ‘மகிழ்ச்சி’ பங்கேற்கும் ‘மண்டல அளவிலான பருவமழை முன்னேற்பாடு’ நிகழ்ச்சி பற்றிய தகவல்கூட ‘கல்லான’வருக்கு லேட்டாகவே தெரிய வந்ததாம்.

அதேசமயம், ஒருகாலத்தில் சூரியக் கட்சியில் அஞ்சாநெஞ்சரின் அடிப்பொடியாக இருந்து தற்போது விசில் பார்ட்டியில் எம்எல்ஏ ஆகி இருப்பவரின் எம்எல்ஏ அலுவலகத்தை ‘மகிழ்ச்சி’ மாண்புமிகு தான் திறந்துவைக்கிறாராம். இதற்காகத்தான் அவர் மீனாட்சிப் பட்டணத்துக்கே வருவதாக அவரது ஆதரவாளர்கள் காலரைத் தூக்கிவிடுகிறார்களாம்.

இதையெல்லாம் பார்த்துவிட்டு பொருமித் தவிக்கும் ‘கல்லான’வரின் விசுவாசிகள், “எல்லாரும் சவுண்டா இருக்கதால முன்னேறிக்கிட்டே போறங்க. எங்க அண்ணன் பாவம் சார்... பொருளாதார ரீதியா வீக்கா இருக்கதால அவர கிள்ளுக் கீரையா நினைக்கிறாங்க” என்று அப்பாவித்தனமாய் கேட்கிறார்கள்.

மீனாட்சிப் பட்டண விசில் பார்ட்டியில் விசும்பல்கள் | உள்குத்து உளவாளி
இன்னொரு நடிகர் மூலம் விஜய்யை வீழ்த்த முடியாது: துரை வைகோ கருத்து

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in