தூங்காநகர் ‘பட்டி’ சரகத்தில் ‘நாட்டுயர்வு’ அதிகாரி ஆட்டம் | உள்குத்து உளவாளி

தூங்காநகர் ‘பட்டி’ சரகத்தில் ‘நாட்டுயர்வு’ அதிகாரி ஆட்டம் | உள்குத்து உளவாளி
Updated on: 
1 min read

“நான் பொம்பள இல்லடா... போக்கிரி” - தூங்காநகர் மாவட்டத்தின் ‘பட்டி’ சரகத்தில் ’நாட்டுயர்வு’ துறையில் குரூப் ஒன் அதிகாரியாக இருக்கும் அம்மணி ஒருவர் தான் இப்படி சாமி விக்ரம் கணக்காய் பொளந்து கட்டுகிறாராம்.

தூங்காநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருந்தும் பக்கத்து மாவட்டத்தைச் சேர்ந்தவர் என போலிச் சான்றிதழ் கொடுத்து சொந்த மாவட்டத்திலேயே பணியில் தொடரும் இவர், தொட்டது அனைத்தையும் ‘துட்டாக்க’ நினைக்கிறாராம். கடந்த ஆட்சியில் ஊழலின் உச்சமாய் இருந்த இந்த அம்மணி இப்போதும் அந்தப் ‘புகழை’ கண்ணும் கருத்துமாய் காப்பாற்றி வருகிறாராம்.

எந்த இடத்துக்கு ஆய்வுக்குப் போனாலும் கவரில் ரூ.5 ஆயிரம் கட்டாயம் இருக்க வேண்டுமாம். இல்லாவிட்டால் எதையாவது குடைந்து எடுத்து குற்றப்பத்திரிகை எழுதிவிடுவாராம். பணியாளர்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய பணப் பலன்களுக்கு ஒப்பம் அளிப்பதற்கும் அம்மணிக்கு தரவேண்டியதைத் தந்தால் தான் பேனாவை கையில் எடுப்பாராம்.

அரியர் பணம் வந்தால் கூட அதில் 10 சதவீதமாவது கறக்காமல் கைமூட மாட்டாராம். இதற்கு முன்பு இவர் பணியில் இருந்த ‘கடை’ வங்கியில் ஐந்தரைக் கோடிக்கு ஊழல் அரங்கேறியதாம். அதில் மற்றவர்களை சிக்கவைத்துவிட்டு இந்த அம்மணி மட்டும் தந்திரமாகத் தப்பிவிட்டாராம். தனது செல்வாக்கை தலைமைச் செயலகம் வரைக்கும் வளர்த்து வைத்திருக்கும் இந்த அம்மணி குறித்து இப்போதைய முதலமைச்சர் வரைக்கும் புகார்களை தட்டிவிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை என்கிறார்கள் ‘நாட்டுயர்வு’ பணியாளர்கள்.

தூங்காநகர் ‘பட்டி’ சரகத்தில் ‘நாட்டுயர்வு’ அதிகாரி ஆட்டம் | உள்குத்து உளவாளி
வீர, தீர செயலுக்கான அண்ணா பதக்கத்துக்கு விண்ணப்பிக்க அழைப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in