தூங்காநகர் மாவட்ட டாஸ்மாக் வட்டார சலசலப்பு | உள்குத்து உளவாளி

தூங்காநகர் மாவட்ட டாஸ்மாக் வட்டார சலசலப்பு | உள்குத்து உளவாளி
Updated on: 
1 min read

சூரிய கட்சி ஆட்சியில் பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்கியதை பிரமாதப் பிரச்சாரமாக முன்னெடுத்தது விசில் கட்சி. இதற்காக லிரிக்ஸ் எல்லாம் போட்டார் விசில் தலைவர். இருப்பினும் இந்த ஆட்சியிலும் அது முற்றாக ஒழிந்தபாடில்லை.

தெரிந்தும் தெரியாமலும் இன்னமும் சிலர் வாங்கிக் கொண்டு தான் இருக்கிறார்கள். அதற்கு அவர்கள் ஒரு நியாயத்தையும் சொல்கிறார்கள். அதேசமயம், ரீல்ஸ்களுக்குப் பயந்து பெரும்பகுதியான டாஸ்மாக் பணியாளர்கள் பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்க தயங்குகிறார்கள்.

இந்த நிலையில், தூங்கா நகர் மாவட்டத்தில் டாஸ்மாக் உதவிப் பொறுப்பில் இருக்கும் பெண் அதிகாரி ஒருவர், தங்களது எல்லைக்குள் உள்ள ஒவ்வொரு டாஸ்மாக் கடையிலிருந்தும் தனக்கு மாதம் 1000 ரூபாய் ‘கட்டிங்’ காலம் தவறாமல் வந்துவிட வேண்டும் என கண்டிஷன் போடுகிறாராம். அத்தோடு விடாமல் தனக்கு கரன்சி தேவைப்படும் போதெல்லாம் ஆய்வு என்ற பெயரில் தனக்கு வேண்டிய அலுவலர்களை டாஸ்மாக் கடைகளுக்கு ஆய்வுக்கு அனுப்புகிறாராம்.

அதுசமயம் எங்காவது முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டால் அதையே ஆதாரமாக வைத்துக் கொண்டு மேல் நடவடிக்கை எடுக்காமல் இருக்க ‘பேரம்’ பேசி வசூலிக்கிறாராம்.

அண்மையில், மாதத் ‘தவணையை’ வசூலிக்கும் பொறுப்பை டாஸ்மாக் ஊழியர் ஒருவரிடம் ஒப்படைத்தாராம். இதனால் நமக்கு ஏதும் சிக்கல் வந்துவிடுமோ என பயந்த அந்த ஊழியர், “யாரும் இப்ப பாட்டிலுக்கு 10 வாங்குறது இல்லை. அப்படி இருக்கையில் அவங்கட்ட எப்படி பணம் கேட்பது?” என்று தயங்கியபடியே சொன்னாராம். அதை காதிலேயே வாங்கிக் கொள்ளாத பெண் அதிகாரி, “அதெல்லாம் எனக்குத் தெரியாது. கேட்டதக் குடுக்கலைன்னா விளைவுகளை சந்திக்க தயாரா இருக்கட்டும்” என்று மிரட்டல் தொனியில் சொன்னாராம்.

இது தொடர்பான ஆடியோ ஒன்றும் லீக் ஆகி தூங்காநகர் மாவட்ட டாஸ்மாக் வட்டாரத்தை சுற்றி வந்த பிறகும் அதிகாரி அடங்கியபாடில்லை என்கிறார்கள்.

தூங்காநகர் மாவட்ட டாஸ்மாக் வட்டார சலசலப்பு | உள்குத்து உளவாளி
அரசு அறிவித்த 45 நாட்களைக் கடந்தும் மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு தொடரும் நீர் திறப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in