

எடக்கானவர் மீண்டும் முதன்மைப் பொறுப்புக்கு வரவேண்டும் என்பதற்காக லாரி மாவட்டத்தின் ‘மங்கலம்’ தொகுதி முன்னாள் எம் எல்ஏ-வான ‘சந்திர’மானவர் அண்மையில், கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள நாச்சியாயி அம்மனுக்கு 100 கிடா பலி கொடுத்து கட்சியினருக்கு கறி விருந்து வைத்தாராம்.
இதில் சிக்கல் என்ன வென்றால், கடந்த தேர்தலில் இலைக் கட்சியில் இடமில்லை என்றதும் சுயமாக களத்தில் நின்று இலையைச் சாய்த்த இவர், மிகச் சமீபத்தில் தான் மீண்டும் இலைக் கட்சியில் இணைந்தாராம். இவர் மீண்டும் சீட்டுக்காகத்தான் சீன் போடுகிறார் என்றதும் இவரை கட்சிக்குள் விடாமல் வைத்திருந்தாராம் மாவட்டத்தின் தங்கமான ‘பெல்’ புள்ளி. ஆனால், எடக்கானவரை நேரில் சந்தித்து சாதித்து விட்டாராம்.
இந்த நிலையில், எடக்கானவர் ‘மங்கலம்’ தொகுதிக்கு பிரச்சாரம் வந்தபோது, ‘சந்திர’மானவரை பிரச்சாரப் பேருந்தில் ஏற்ற தடைகளை ஏற்படுத்தி வைத்திருந்தாராம் ‘பெல்’ புள்ளி. ஆனால், அதையெல்லாம் தகர்த்து சேலத்து ‘டெண்டர்’ கோவனை ‘வெயிட்டாக’ கவனித்து பிரச்சாரப் பேருந்துக்குள் பிரசன்னமாகி விட்டாராம். “எப்படியும் இந்த முறை இங்கே சீட்டை வாங்கப் பார்ப்பார்.
இங்கு ஆகாது என்று தெரிந்தால், ரூட்டை மாற்றி சூரியக் கட்சி தலைவர் மறுபடியும் முதன்மைப் பொறுப்புக்கு வரவேண்டும் என்று இன்னொரு கிடா விருந்துக்கு ஏற்பாடு பண்ணிருவார்” என்று ‘சந்திர’மானவரின் சரித்திரத்தைச் சொல்லி கலாய்க்கிறார்கள் ‘பெல்’ புள்ளியின் பெஸ்ட்டான ஆதரவாளர்கள்.