

சட்டப்பேரவை தேர்தல் முடியும் வரை ஓய்வின்றி பணியாற்ற தயாராக இருக்க வேண்டுமென திமுக நிர்வாகிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
‘உடன்பிறப்பே வா’ எனும் பெயரில் தொகுதி வாரியாக திமுக நிர்வாகிகளுடனான சந்திப்பு அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது. இதுவரை 89 தொகுதிகளின் நிர்வாகிகளுடன் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் ‘ஒன் டு ஒன்’ சந்தித்து நேரடி ஆலோசனை நடத்தி வருகிறார். அதன்படி, 42-வது நாளாக நேற்று நடைபெற்ற நிகழ்வில் திருவள்ளூர் தொகுதிகளின் நிர்வாகிகளை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேசினார்.
அப்போது, தற்போதைய சிட்டிங் தொகுதியான திருவள்ளூரில் மீண்டும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வேண்டும். எஸ்ஐஆர் திருத்தப் பணிகள், பூத் கமிட்டி கூட்டங்களை சுணக்கமின்றி மேற்கொள்ள வேண்டும். தேர்தல் முடியும் வரை அனைவரும் ஒய்வின்றிஉழைக்க வேண்டும். பொது மக்களை சந்திக்கும்போது அரசின் நலத் திட்டங்களின் பயன்களை எடுத்துக்கூற வேண்டும் என்பன உட்பட பல்வேறு அறிவுறுத்தல்களை நிர்வாகிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கியதாக கூறப்படுகிறது.
இதனிடையே, நேற்று முன்தினம் நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்ட ஆலங்குளம் தெற்கு ஒன்றியச் செயலாளர் சிவகுமார், நீண்டகால திமுக உறுப்பினரான தனது தந்தை முத்துவேல், முதல்வருடன் சேர்ந்து புகைப்படம் எடுக்க விரும்புவதாக தெரிவித்தார். உடனே அவரின் தந்தையிடம் நேரடியாக செல்போனில் பேசிய முதல்வர், முத்துவேலை சென்னைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அந்தவகையில் நேற்று சென்னை வந்த முத்துவேல், அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
அவருக்கு கருணாநிதி சிலையை முதல்வர் பரிசளித்தார். இதுகுறித்து முத்துவேல் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘அண்ணா காலத்தில் இருந்தே திமுக-வில் உறுப்பினராக இருக்கிறேன். தற்போது எனது ஆசையை அறிந்தவுடன் தொலைபேசியில் பேசியது மட்டுமின்றி, நேரில் வரவழைத்து என்னுடன் முதல்வர் புகைப்படம் எடுத்துக் கொண்டது மிகவும் நெகிழ்ச்சியான தருணம்’’ என்றார்.