

உலகப் புகழ்பெற்ற அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை சிறப்பாக நடத்தி முடித்துவிட்டதாக ஆளும் தரப்பு அகமகிழ்கிறது. ஆனால், குடமுழுக்கில் அங்கிருக்கும் அறமான துறையின் அதிகாரியானவர் இஷ்டத்துக்கு டாம்பீகம் செய்து அரசுக்கு தேவையற்ற அவப்பெயரை சம்பாதித்து வைத்துவிட்டாராம்.
அவரது இடத்தில் முன்பு இருந்தவர் மீது கட்சி முத்திரை குத்தி அவரை பக்கத்து மாவட்டத்துக்கு மாற்றிவிட்டுத்தான் ‘செல்லமான’ இவரை அந்தப் பொறுப்பில் அமர்த்தினார்களாம். அறங்காவலர் குழுவினரின் பெயரை கும்பாபிஷேக அழைப்பிதழில் சேர்க்காமல் விட்டு நீதிமன்றத்தில் குட்டுப்பட வேண்டிய நிலையை அரசுக்கு உருவாக்கியதும் இந்த அதிகாரியின் கைங்கர்யம் தானாம்.
இதையெல்லாம் செய்தால் ஆளும் தரப்பின் மேல்மட்டத்தில் இருப்பவர்கள் தன்னை கொண்டாடி குஷிப்படுத்துவார்கள் என நினைத்து செல்லமானவர் செய்த பல வேலைகள் பூமராங் ஆகி ஆளும் கட்சியையே திருப்பித் தாக்கியது தான் மிச்சமாம். ஆனாலும் இந்தச் ‘செல்லப்’ பிள்ளை திருந்தவில்லையாம். விசில் அரசுக்கு முட்டுக் கொடுத்து நிற்கும் சீற்றக் கட்சியின் தலைவருக்கு நெருக்கமானவர் என தன்னைப் பற்றி முன்கூட்டியே நோட்டீஸ் போட்டு வைத்திருக்கிறாராம் இந்த அதிகாரி.
அதையே கேடயமாக்கிக் கொண்டு, “என்னை யாரும் ஆட்டவோ அசைக்கவோ முடியாது” என ஆட்டம் காட்டுகிறாராம். கோயில் நிகழ்ச்சிகள் தொடர்பாக செய்தியாளர்கள் ஏதாவது கேள்வி கேட்டால்கூட, “நாங்க சொல்றத மட்டும் போட்டா போதும். நீங்க போடாட்டிக் கூட பரவாயில்லை, இன்ஃப்ளூயன்சர்ஸ் இருக்காங்க. அவங்கள வெச்சு நான் பாத்துக்குறேன்” என்று தெம்பாகச் சொல்கிறாராம்