

பட்டியலில் இருந்து தூக்கப்பட்டால் முதல் ஆளாக இருப்பார் என்று ஆரூடம் சொல்லப்படும் ‘ஜெகத்தை ஆளும்’ பெண் மாண்புமிகு, ‘எந்தப் பக்கம் போனாலும் மறிச்சு மறிச்சு கேட் போடுறாங்களே’ என்று வெந்து நொந்து கிடக்கிறாராம். ஏற்கெனவே சொந்த மாவட்டத்தில் தன்னை சாய்க்க சமயம் பார்த்துக் கொண்டிருக்கும் சக மாண்புமிகுவை சமாளிக்கவே பெரும்பாடு படுகிறாராம் அம்மணி.
இந்த நிலையில், மக்கள் சந்திப்புக் கூட்டங்களுக்குச் சென்றால் தனக்கு எதிராக அவதூறு பரப்ப சதிசெய்கிறார்கள் என்று சொல்லி வாக்காளர்களுக்கு நன்றி சொல்லக்கூட போகாமல் இருந்தார்.
இதற்கு நடுவில் யாரோ கொடுத்த யோசனையைக் கேட்டு, காபி வித் நான், குறைகளைச் சொல்ல பிரத்யேக ஆப், புகார் பெட்டி, விடுமுறை நாட்களில் நாள் முழுவதும் மக்கள் சந்திப்பு என கிளம்பினார் ஜெகமானவர்.
இதைத் தொடர்ந்து, அண்மையில் மக்களுக்கு நன்றி சொல்லப் போன இடத்தில் மின்வெட்டு தொடர்பாக மக்கள் கொக்கி போட்டு கேள்வி எழுப்பியதால் மிரண்டுபோனவர், ‘சொன்னவரைக்கும் போதும்’ என்று நன்றி நவில்தல் பயணத்தை நடுவழியில் முடித்துக் கொண்டு ஜாகைக்கு திரும்பிவிட்டார்.
அதன் பிறகு, பிளான் போட்டு வைத்திருந்த மக்கள் சந்திப்புக் கூட்டங்களையும் சத்தமில்லாமல் ரத்து செய்தார். அடுத்ததாக, நெசவாளர் போராட்டத்தை கண்டுகொள்ளாமல் அடிபொடிகளை வைத்து பிரச்சினையை மடைமாற்ற முயற்சிப்பதாக அம்மணிக்கு எதிராக நெசவாளர்களே சர்ச்சையைக் கிளப்பினர்.
அரண்டு மிரண்டு போனவர், உடனே கைத்தறி மாண்புமிகுவைச் சந்தித்துப்பேசி, நெசமாவே நெசவாளர்கள் பிரச்சினை பற்றிப் பேசியதாகச் சொல்லி சோஷியல் மீடியாவில் போட்டோவை வெளியிட்டார். இவ்வளவு எல்லாம் செய்தாலும், அவர் சொல்வதை மற்றவர்களை நம்பவிடக் கூடாது என்பதில் அவரது அன்புக்குரிய அரசியல் எதிரிகள் அடம்பிடித்து நிற்கிறார்களாம்.